புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி ஆளும் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறைமலையடிகள் சாலையில் மறியலில் ஈடுபட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், பஸ், டெம்போ, ஆட்டோ உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
இதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. பந்த் போராட்டத்தையொட்டி அதிகாலை முதல் புதுவையில் தனியார் பஸ்கள் முற்றிலுமாக ஓடவில்லை. புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கியது.
இதனிடையே இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மறைமலையடிகள் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் ஒன்று கூடி உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அவ்வழியே வந்த அரசு பேருந்தை வழிமறித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், வைத்தியநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாரங்கம், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, விஸ்வநாதன், எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூர்த்தி, நாரா. கலைநாதன், பாலன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், முதலியார்பேட்டை தொகுதியில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரும், கதிர்காமம் தொகுதியில் தொகுதி செயலாளர் வடிவேல் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட 100 பேரும், மணவெளியில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், திமுக தொகுதி செயலாளர் ராஜாராமன் ஆகியோர் தலைமையில் தவளக்குப்பத்தில் மறியலில் ஈடுபட்ட 150 பேரும், ஊசுடு தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், இளஞசெழியப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் பத்துக்கண்ணு சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட 125 பேரும், ஏம்பலம் தொகுதியில் காங்கிரஸ் பிரமுகர் மோகன்தாசு, தி.மு.க ரவிச்சந்திரன் தலைமையில் கிருமாம்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட 130 பேரும் என மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.