நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து, மக்களவை திடீரென ஒத்திவைக்கப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற நடத்தை தொடர்பான எட்டு பிரச்னைகளை முன்வைத்து, மக்களவையில் கண்ணியத்தை பராமரிக்க வேண்டும் என்று ஓம் பிர்லா பேசியபோது எந்த சம்பவத்தை குறிப்பிட்டார் என்று கேள்வி எழுப்பினர்.
ஆங்கிலத்தில் படிக்க:
மக்களவையில் உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் உயர் தரங்களையும் கண்ணியத்தையும் பராமரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா திடீரென அவையை ஒத்திவைத்ததை அடுத்து, INDIA கூட்டணியின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை பிர்லாவை சந்தித்து, "அவைக்கு வெளியே பிர்லா வெளியிட்ட அறிக்கையை அரசியல்மயமாக்குவது" உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
இந்தியா கூட்டணி பிரதிநிதிகள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் அளித்தனர். அதில் "மக்களவையில் துணை சபாநாயகர் நியமிக்கப்படாதது", "எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது", "வணிக ஆலோசனைக் குழுவின் (BAC) முடிவுகள் புறக்கணிக்கப்பட்டது" உள்ளிட்ட எட்டு முக்கிய பிரச்னைகள் இடம்பெற்றுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் எழுப்பப்பட்ட மற்ற பிரச்னைகள் "ஒத்திவைப்பு தீர்மானங்கள் புறக்கணிக்கப்பட்டது", "தனிநபர் உறுப்பினர்களின் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் புறக்கணிக்கப்பட்டது", "பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை விவாதங்களில் முக்கிய அமைச்சகங்கள் புறக்கணிக்கப்பட்டது", "விதி 193 இன் கீழ் விவாதங்கள் இல்லாதது" (வாக்களிப்பு இல்லாமல் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்கிறது), மற்றும் "எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒலிவாங்கிகள் அணைக்கப்பட்டது" ஆகியவை ஆகும்.
காங்கிரஸின் கவுரவ் கோகோய், தி.மு.க-வின் ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், டி.எம்.சி-யின் கல்யாண் பானர்ஜி, சிவசேனா (யு.பி.டி) தலைவர் அரவிந்த் சாவந்த், என்.சி.பி (எஸ்பி) தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஆர்.ஜே.டி, ஐ.யூ.எம்.எல், ம.தி.மு.க மற்றும் ஆர்.எஸ்.பி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கோகோய், “ஆளும் கட்சி நாடாளுமன்ற விதிகள், மரபுகள் மற்றும் சபையின் கலாச்சாரத்திற்கு எதிராகச் செல்லும் விதம் குறித்து எங்களது பொதுவான பிரச்னைகளை நாங்கள் தெரிவித்தோம்... நாங்கள் ஒரு கடிதத்தை அளித்தோம். சபாநாயகர் நேற்று தனது அறிக்கையை வாசித்தார் என்ற பிரச்னையை நாங்கள் எழுப்பினோம். அவர் எந்த விஷயம் மற்றும் எந்த தருணம் குறித்து பேசினார் என்பது தெளிவாக இல்லை. உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் விதி 349-ஐ பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், அவர் எந்த குறிப்பிட்ட சம்பவத்தை குறிப்பிடுகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. மாலையில் இந்த சம்பவம் அரசியலாக்கப்பட்டு பரப்பப்படுவதை நாங்கள் பார்த்தோம். சபாநாயகரிடம் அதே விஷயத்தை நாங்கள் கூறினோம் - அவரது அறிக்கை அவைக்கு வெளியே அரசியலாக்கப்படுகிறது” என்றார்.
“அவையின் கண்ணியத்தை பராமரிப்பது பற்றி புதன்கிழமை அவர் பேசியபோது அவர் எதை குறிப்பிட்டார் என்பதை சபாநாயகர் வெளிப்படுத்தினாரா” என்று கேட்டதற்கு, “சபாநாயகர் கூட்டத்தில் என்ன சொன்னார் என்பதை விவாதிப்பது பொருத்தமானதாக நான் நினைக்கவில்லை” என்று கோகோய் கூறினார்.
புதன்கிழமை, அவை திடீரென ஒத்திவைக்கப்பட்டபோது, ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவை ஜனநாயக நெறிமுறைகளின்படி நடத்தப்படவில்லை" என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனக்கு அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.