/indian-express-tamil/media/media_files/2025/09/14/india-bloc-targets-pm-modi-over-manipur-visit-2025-09-14-12-49-10.jpg)
'கேலிக்கூத்து, தாமதம், பெரும் அவமானம்'... மோடியின் மணிப்பூர் பயணத்தை விமர்சிக்கும் 'இந்தியா' கூட்டணி
மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குகி-ஜோ சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் கலவரத்திற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக சனிக்கிழமை அங்கு சென்றார். அவரது இந்தப் பயணத்தை 'கேலிக்கூத்து' என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'அவமானம்' என்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி விமர்சித்துள்ளது. மணிப்பூர் பயணத்தின்போது, பிரதமர் மோடி இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து, அங்கு நடந்த கூட்டங்களிலும் உரையாற்றினார்.
கடந்த 2 ஆண்டுகளாக, காங்கிரஸ் மற்றும் பிற 'இந்தியா' கூட்டணி கட்சிகள், பிரதமர் மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தன. எதிர்க்கட்சிகள் பலமுறை நாடாளுமன்றத்திலும் பிரதமரின் 'மௌனம்' குறித்து கேள்வி எழுப்பின.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமரின் '3 மணி நேர வருகை இரக்கத்தால் வந்தது அல்ல', அது 'கேலிக்கூத்து, பெயரளவில் நடக்கும் ஒன்று, மற்றும் காயமடைந்த மக்களுக்கு ஒரு பெரும் அவமானம்' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். "இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் நீங்கள் இன்று நடத்தியது 'ரோட்ஷோ' அல்ல, நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் அழுகுரலுக்குப் பயந்து ஓடும் ஒரு கோழைத்தனமான செயல்" என்றும் கார்கே கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கடந்த 864 நாட்களாக மணிப்பூரில் வன்முறை நடந்து வருகிறது என்றும், 300 உயிர்கள் பலியாகி, 67 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து, 1,500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்த காலக்கட்டத்தில், நீங்கள் 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளீர்கள். ஆனால், சொந்த நாட்டு மக்களிடம் 2 வார்த்தை ஆறுதல் சொல்லக் கூட ஒருமுறை கூட செல்லவில்லை" என்று கார்கே குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே, மோடியின் கடைசி மணிப்பூர் பயணம் ஜனவரி 2022-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டுமே இருந்தது என்றும் கூறினார். மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இலக்காகக் கொண்டு, "உங்கள் இருவரின் கடுமையான திறமையின்மையும், அனைத்து சமூகங்களுக்கும் துரோகம் இழைத்ததும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்து விசாரணையில் இருந்து தப்பிக்கிறது. இன்னும் வன்முறை தொடர்கிறது" என்றும் கார்கே குற்றம்சாட்டினார்.
காங்கிரஸின் மக்களவை துணைத் தலைவரும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான கௌரவ் கோகோய், "மணிப்பூரில் அமைதி மற்றும் மீட்புக்கான முதல் படி, பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்கு முன்பே மாநிலத்திற்குச் சென்றிருக்க வேண்டும்" என்று கூறினார். "இப்போது, 2 ஆண்டு தாமதமாக அவரது வருகை, வடகிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அது வெறும் பிரதமரின் தோற்றத்தில் கவனம் செலுத்துகிறது, கள யதார்த்தத்தில் அல்ல" என்றும் கோகோய் தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை, பிரதமர் இப்போது மணிப்பூருக்குச் செல்வது 'பெரிய விஷயம் இல்லை' என்று கூறினார். "மணிப்பூர் நீண்ட காலமாக சிக்கலில் உள்ளது, இப்போதுதான் பிரதமர் அங்கு செல்ல முடிவெடுத்துள்ளார். அதனால், அது பெரிய விஷயம் அல்ல. இன்று இந்தியாவில் முக்கிய பிரச்னை 'வாக்கு திருட்டு'தான்" என்று அவர் கூறினார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமரின் மணிப்பூர் பயணம் 'எதிர்க்கட்சிகளுக்கு தட்டில் வைத்து கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு' என்றார். "பா.ஜ.க. மற்றும் மோடி அரசு மணிப்பூர் விஷயத்தில் பெரும்பாலும் மௌனம் காத்தன என்பது நமக்குத் தெரியும். பிரதமரும் நாடாளுமன்றத்தில் இந்த தலைப்பை தவிர்த்தார், பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார். இப்போது அவர் அங்கு சென்றால், இந்தப் பயணம் அடையாளப்பூர்வமானதுதான் என்பதை மாநில மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நாம் உறுதி செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
'இந்தியா' கூட்டணியின் பிற கட்சிகளும், பிரதமரின் 'பயணத்தை' தாக்கிப் பேசின. அதை 'மிகக் குறைவு, மிகத் தாமதம்' என்றும் அழைத்தன.
சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி) எம்.பி. ஜாவேத் அலி கான், பிரதமர் "பல ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரை கவனத்தில் எடுத்துக்கொண்டார், இதை அவர் முன்னரே செய்திருக்க வேண்டும்" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். "வன்முறை தொடங்கிய முதல் நாளிலேயே பிரதமரின் அணுகுமுறை மணிப்பூர் விஷயத்தில் நேர்மறையாக இருந்திருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும், மாநிலம் அழிக்கப்பட்டிருக்காது. இந்த மோதல் மிக விரைவாக முடிவுக்கு வந்திருக்கும். ஆனாலும், தாமதமாக வந்தது கூட பரவாயில்லை" என்று கான் கூறினார்.
திரிணாமூல் காங்கிரஸ் (டி.எம்.சி) எம்.பி. சாகரிகா கோஸ், "இது மிகவும் வெட்கக்கேடான போட்டோ அரசியல்தான். 2 ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் நெருக்கடியில் உள்ளது. இப்போது, பிரதமர் அங்கு 3 மணி நேரம் சென்றுள்ளார். இது வெறும் அடையாளம்தான். இது மிகக் குறைவு மற்றும் மிகத் தாமதம்" என்று கோஸ் கூறினார். "மணிப்பூருக்கு ஆறுதல் தேவை, உண்மையான இரக்கம் தேவை, வெறும் அடையாள அரசியல் அல்ல" என்றும் அவர் கூறினார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) எம்.பி. மனோஜ் குமார் ஜா, பிரதமரின் "தாமதமான" மணிப்பூர் பயணம் "சமாதானம் மற்றும் ஆறுதலைத் தரும் வகையில் இருந்திருக்க வேண்டும்" என்றார். "எதிர்பார்ப்புகள் நியாயமானவை - நெருக்கடியான தருணங்களில் தலைவர் உறுதியையும், பணிவையும், உறுதியான நடவடிக்கைகளையும் வழங்க வேண்டும். அதற்குப் பதிலாக, இப்போது பழக்கமான முறைதான் வெளிப்பட்டுள்ளது: சத்தம் அதிகம் உள்ள, ஆனால் கண்டெண்ட் குறைவான பேச்சு. பிளவுகளை நீக்கி, மக்களின் பதட்டங்களுக்கு இரக்கத்துடன் மற்றும் தெளிவுடன் பதிலளிக்கும் வாய்ப்பு மீண்டும் வீணடிக்கப்பட்டது. வெறும் வார்த்தைகளால் குணப்படுத்த முடியாது; அவை செயல் மற்றும் நேர்மையால் ஆதரிக்கப்பட வேண்டும். பேச்சு யதார்த்தத்தை விஞ்சும்போது, ஏமாற்றம் ஆழமாகிறது, நம்பிக்கை மேலும் குறைகிறது" என்று ஜா கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) தலைவர் பி.சந்தோஷ் குமார், பிரதமரின் மணிப்பூர் பயணம் 'பயனற்றது' என்று கூறினார். மேலும், 'மோடியின் பக்தர்கள்' நாடாளுமன்றத்தில் அவர் மாநிலத்திற்குச் செல்லாததை நியாயப்படுத்தினர் என்றும் கூறினார். "இப்போது என்ன மாறிவிட்டது? அவர்கள் குறைந்தபட்சம் இந்தப் பயணம் பற்றியும், ஏன் இப்போது நடக்கிறது என்றும் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்" என்று குமார் கூறினார். "பஸ் புறப்பட்ட பிறகு டிக்கெட் வாங்கியது போல் உள்ளது. இப்போது என்ன பயன்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us