இந்திய - சீனா எல்லையில் நிகழும் திடீர் பதட்டம் தொடர்பாக, இந்திய பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இவ்விரு தலைவர்களும், ஏப்ரல் 4ம் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்லைப்பகுதியில் சீனா நடத்துவரும் அத்துமீறலால், மோடி மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக, அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினிடையே டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்தியாவும், சீனாவும் தற்போது மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இரு நாடுகளிலும் தலா 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர். இரு நாடுகளும் வலிமை வாய்ந்த ராணுவ கட்டமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த எல்லை பிரச்சனையால், இந்தியா மகிழ்ச்சியிழந்து காணப்படுகிறது. இதே நிலையில் தான் சீனாவும் இருக்கும். நான் சீனாவுடன் பேசுகிறேன் என்று இந்திய பிரதமர் மோடியுடன் தெரிவித்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பாக என்ன நடக்கப்போகிறது என்ற மனவருத்தத்தில் மோடி இருப்பதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய தான் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடந்ததாக டிரம்ப் தெரிவித்த இந்த கருத்திற்கு, இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சமீபகாலத்தில் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. இவ்விரு தலைவர்களும், ஹைட்ரோகுளோரோகுயின் விவகாரம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி கடைசியாக ஆலோசனை நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய - சீனா எல்லை விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் தொடர்புகொண்டு ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய - சீன எல்லை விவகாரத்தில் சமரசம் செய்ய இந்தியா தன்னை கேட்டுக்கொண்டதாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்அனுராக் ஸ்ரீவத்சவா, இந்த விவகாரத்தை சீனாவுடன் பேசி சுமூகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியா, தனது அண்டைநாடுகளுடன் ஏற்படும் எல்லை பிரச்சனை போன்ற விவகாரங்களில் கடந்தகாலங்களிலும் மூன்றாம் நாடு மத்தியஸ்தம் செய்ய விரும்பியதில்லை. அதேநிலையை தான் இந்த விவகாரத்திலும் பின்பற்ற இருக்கிறோம். அண்டை நாடுகளிடையேயான பிரச்சனையை நாங்களே பேசி தீர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்று ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்
காஷ்மீர் விவகாரத்திலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், தற்போதைய சீன எல்லை விவகாரத்திலும் அமெரிக்கா இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி விருப்பம் தெரிவித்திருந்தார். டிரம்பின் இந்த கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு, காஷ்மீர் விவகாரத்தில், இந்திய - பாகிஸ்தான் நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சிப்போம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
டிரம்ப் தொடர்ந்து மத்தியஸ்தம் தொடர்பான கோரிக்கை விடுத்து வருகிறார். இந்தியா எந்த விவகாரத்திலும், மூன்றாம் நாட்டின் தலையீட்டை விரும்பியதில்லை, விரும்பப்போவதுமில்லை என்று பிரதமர் மோடி, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டிலேயே உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.