ஜூன் 15-16-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட கடுமையான மோதலில் கொல்லப்பட்ட கர்ணல் பி.சந்தோஷ் பாபு தலைமையிலான 20 இந்திய வீரர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் பல எலும்பு முறிவுகளால் பலத்த காயம் அடைந்தனர் என்று தெரியவந்துள்ளது.
இந்திய வீரர்களும் வீரத்துடன் போராடி சீனர்களுக்கு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 17ம் தேதி, “எங்கள் வீரர்கள் சண்டையிட்டு இறந்துவிட்டார்கள் அதற்காக தேசம் பெருமிதம் கொள்ளும்” என்று கூறினார்.
செங்குத்தான மற்றும் துண்டிக்கப்பட்ட நிலப்பரப்பில் வீரர்களுக்கு இடையே கை கலப்பு சண்டை பல மணி நேரம் தொடர்ந்தது. பல இந்திய வீரர்கள் நீரில் மூழ்கி குளிர் காரணமாக இறந்தனர். மோதலின் போது அவர்கள் தூக்கி எறியப்பட்டு அல்லது ஆற்றில் விழுந்து இறந்தனர் என்று அறியப்படுகிறது.
“உயிர் தியாகம் செய்த வீரர்களின் உடல்களின் நிலையை வைத்து அவர்கள் கடுமையான போரில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்திய வீரர்கள் பல சீன வீரர்களைக் கொன்றதாகத் தெரிகிறது. அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் கூர்மையான முனைகள் கொண்ட பல குத்து காயங்களைப் போல காணப்பட்டது. அவற்றில் பல எலும்பு முறிவுகளும் இருந்தன.” என்று உடல்களைப் பார்த்த லேவின் சோனம் நுர்பூ மெமோரியல் மருத்துவமனையின் (எஸ்.என்.எஸ்.) பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறினார்.
லேவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட காயமடைந்த வீரர்களுடனான உரையாடலில் இருந்து வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கூறுகையில், தங்கள் கமாண்டிங் அதிகாரி கர்ணல் சந்தோஷ் பாபு தாக்கப்பட்ட பின்னர் இந்திய விரர்கள் அனைவரும் எல்லாவற்றுடனும் சீனர்களிடம் சென்றதாகத் தெரிகிறது.
“இந்திய வீரர்கள் தங்கள் கர்னல் மற்றும் முன்னால் சென்ற இரண்டு பேர் தாக்கப்பட்ட பின்னர் முழு பலத்துடன் சென்றனர்... பின்னர் இந்திய வீரர்கள் முழு தாக்குதலை நடத்தினர். இந்திய வீரர்கள் மருத்துவமனையின் ஊழியர்களிடம் கூறுகயில், இந்திய வீரர்கள் கத்தி போன்றவற்றைப் பறித்து, சீனர்களை கடுமையாகத் தாக்கினர் என்று கூறினார்கள்” என்று வட்டாரங்கள் தெரிவித்தனர்.
லேவில் குறைந்தது 18 காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டின் பிற இடங்களில் உள்ள இராணுவ மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். ராணுவம் இந்த மோதலில் காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கையை அளிக்கவில்லை.
லேவில் இருந்து 230 கி.மீ தொலைவில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, ராணுவம் லடாக்கிற்கு பெருமளவில் துருப்புக்களைச் செல்ல உத்தரவிட்டது. சீன மக்கள் விடுதலை ராணுவம் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பத்தைக் காட்ட படைகளைத் திரட்டுவது நடந்துவருகிறது. கடந்த வாரம் நடந்த வன்முறை மோதல் யுக்தியை மறு மதிப்பீடு செய்ய வழிவகுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் அதிகரித்ததால் அதனைக் கட்டுப்படுத்த நிர்வாகம் லேவில் ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை லே கிட்டத்தட்ட முற்றிலுமாக பொதுமுடக்கம் செய்யப்பட்டது. லேவில் சாலைகள் மூடப்பட்டு சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன. போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் இருந்தனர்.
ஊடகங்கள் உட்பட எந்த பொதுமக்களும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ராணுவம், போலீஸ் மற்றும் அரசாங்க வாகனங்கள் மட்டுமே சாலைகளில் இருந்தன. லடாக்கின் யூனியன் பிரதேசத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் கூட்டு தலைநகரில் (கார்கிலுடன்) நிலவிய அமைதி அவ்வப்போது போர் விமானங்களின் சத்தத்தால் கலைக்கப்பட்டது.
லடாக்கில் சனிக்கிழமை 92 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 718 ஆக உள்ளது. இதில் லேவில் 146 பேரும் கார்கில் மாவட்டத்தில் 572 பேரும் உள்ளனர். மேலும், 539 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 120 பேர் கோவிட் பராமரிப்பு மையங்களில் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு, மே 30-ம் தேதி லாடாக் யூனியன் பிரதேசத்தில் 30 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வான் பள்ளத்தாக்கை நோக்கி ஏராளமான ராணுவ வாகனங்கள் செல்வதால் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை பொதுமக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. மேலும், லேவுக்கு விமானங்கள் மூலமாக மட்டுமே செல்ல முடியும். குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையத்தில் ஒரு கோவிட் திரையிடும் பரிசோதனை மையம் நிறுவப்பட்டுள்ளது. அங்கே வரும் அனைத்து பயணிகளும் தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் தோராயமாக சேகரிக்கப்படுகின்றன.
லேவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மோட்டப் டோர்ஜே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “கடந்த ஒரு வாரத்தில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்த பின்னர், மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கை அறிவித்தது. நாங்கள் தயாராக இருக்கிறோம்; எங்களிடம் 42 ஐசியு படுக்கைகள் மற்றும் 21 வென்டிலேட்டர்கள் கொண்ட 2 பிரத்யேக கோவிட் மருத்துவமனைகள் உள்ளன. புற சுகாதார நிறுவனங்களில் உள்ள கோவிட் பராமரிப்பு மையங்களைத் தவிர, எந்தவொரு நோயாளியையும் இதுவரை வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட வில்லை.” என்று கூறினார்.
கார்கில் போர் ஹீரோவும், மகாவீர் சக்ரா விருது பெற்றவருமான கர்ணல் சோனம் வாங்சுக் (ஓய்வு), எல்லையில் பதற்றம் மற்றும் தொற்றுநோய் ஆகியவை லேவில் இதற்கு முன்பு இல்லாத ஒரு அமைதியை ஏற்படுத்தியுள்ளது என்றார். கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த ஒவ்வொரு இந்திய வீரர்களும் குறைந்தது இரண்டு சீனர்களைக் கொன்றதாக தான் நம்புவதாக லேவில் வசிக்கும் கோல் வாங்சுக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
மேலும் “நம்முடைய பக்கத்தில் சீனர்களால் கட்டப்பட்ட சில கட்டமைப்புகள் இருந்தன. அந்த கட்டமைப்புகள் அகற்றப்பட்டதா இல்லையா என்பதைப் பார்க்க ஒரு கண்காணிப்புக் குழு அங்கு சென்றது” என்று கர்ணல் வாங்சுக் கூறினார்.
“இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாங்கள் 20 வீரர்களை இழந்தோம். ஆனால், அதற்கு பதிலாக நாங்கள் ஏற்படுத்திய உயிரிழப்புகள் இரு மடங்குக்கு மேல் 40-43-க்கும் அதிகமாக இருக்கும். நாங்கள் கடுமையாக பதிலடி கொடுத்தோம் என்று நான் நம்புகிறேன். முக்கியமாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த நம்முடைய வீரர்கள் வலுவான கட்டமைப்பைக் கொண்டவர்கள். மேலும், கை கலப்பு போரில் ஈடுபடும்போது நிச்சயமாக நம்முடைய கை மேலே இருக்கும். நம்முடைய சிறுவர்களும் பல சீன வீரர்களைக் கொன்றதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.” என்று கர்ணல் வாங்சுக் கூறினார்.
சீனர்கள் தங்கள் உயிரிழப்புகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறிய கர்ணல் வாங்சுக், “இதே போல 1962ம் ஆண்டிலும் நடந்தது. நம்முடைய ஒரு குமாவோன் கம்பெனி ஆயிரம் பேரைக் கொன்றது. அதே நேரத்தில் நாங்கள் 130 வீரர்களை இழந்தோம். அந்த நேரத்தில் கூட, அவர்கள் உயிரிழந்ததை ஒப்புக் கொள்ளவில்லை. அநேகமாக இந்த முறையும் அவர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.
சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் லடாக் பிராந்தியத்திற்கு பல தசாப்தங்களில் இது மிகவும் கடினமான நேரம். முக்கிய பொருளாதார இடமாக உள்ள இந்த பிராந்தியத்தின் பெரும்பான்மையான மக்களின் ஒரே வருமான ஆதாரமாக உள்ள சுற்றுலாவும் குழப்பத்தில் உள்ளது. விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், விமானத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், எல்லையில் சாலைகள் அமைக்கும் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுமே பயணிக்கின்றனர்.
2019-ம் ஆண்டில் ஜூன் இறுதி வரை 1.33 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் லடாக் சென்றிருந்தனர். இந்த ஆண்டு இதுவரை பயணித்தவர்களின் எண்ணிக்கை 6,055 மட்டும்தான். சுற்றுலாத்துறை இந்த ஆண்டு வருவாயில் ரூ.400 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளது. “2020 எங்கள் வாழ்க்கையில் மிக மோசமான ஆண்டாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்று லேவின் சிறந்த ஹோட்டல் விற்பனையாளர்களில் ஒருவரும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குலாம் முஸ்தபா கூறினார்.
“லேவில் 400க்கும் மேற்பட்ட ஹோட்டல்களும் விருந்தினர் மாளிகைகளும் உள்ளன. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை எங்கள் உச்ச வணிக காலம். கொரோனா வைரஸ் தொற்று மார்ச் மாதம் முதல் எங்கள் வணிகத்தை அழித்தது. இப்போது நாங்கள் எல்லையில் பதட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளோம்” என்று முஸ்தபா கூறினார்.
லடாக்கின் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் சுற்றுலாவைச் சார்ந்து உள்ளனர் என்று முஸ்தபா கூறினார். தொழிலாளர்கள் மற்றும் ஹோட்டல் மற்றும் விருந்தினர் மாளிகைகளின் உரிமையாளர்கள், டாக்ஸி ஆபரேட்டர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பயண ஏற்பாட்டு முகவர்கள், மலையேற்றப் பயணிகள் போன்றவர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். “கொரோனா நம்மைத் தாக்கியபோது, ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர். அவர்கள் திரும்பி வர தொடங்கியிருக்கலாம். ஆனால் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் எங்கள் நம்பிக்கையை குறைத்துவிட்டது ” என்று முஸ்தபா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.