இந்திய - சீன எல்லை விவகாரம் பெரும்பூதாகரமாக வெடித்திருந்த நிலையில், இருநாட்டு அதிகாரிகளும் ஜூன் 17 மற்றும் ஜூலை 5ம் தேதி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததன் விளைவாக, எல்லைப்பகுதியில் பதட்டம் சற்று தணிந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதிசீன படையினர் , இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் எற்படாதநிலையில், ஜூலை 5ம் தேதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனா எல்லை விவகாரம் தொடர்பான சிறப்பு பிரதிநிதி வாங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைகளில், எல்லை விவகாரம், அதில் உள்ள சவால்கள், இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வரை, சீனா திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்திருந்த மத்திய அரசு, ஆனால் தற்போது, சீனா குறித்த பெயரை தவிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 17 : கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் மீது சீனா கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடுமையாக தாக்கியிருந்தார். ஜூன் 6ம் தேதி, இருநாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில், நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் படைகளை திரும்பப்பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.
இருநாட்டு ராணுவ அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், கல்வான் பள்ளத்தாக்கின் அருகே, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், சீனா தொடர்ந்து பல்வேறு கட்டமைப்புகளை அமைத்து வந்தது. இதன்காரணமாக, அப்பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.இது மேலும் இருதரப்பினரிடையே மோதலுக்கு வழிவகுக்கும் என்றும், இதன்காரணமாக உயிர்ப்பலிகள் ஏற்பட காரணமாக அமையும் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சீனா, இந்த விவகாரத்தில் சர்வதேச எல்லை விதிகளை மீறுவதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஜூலை 5 : இந்திய - சீனா எல்லையில் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து, இருநாடுகளின் அதிகாரிகள் தரப்பில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் பலன்
சீனாவின் இந்த தாக்குதல் நடவடிக்கையால், அது பெரும்விளைவுகளை சந்திக்கவேண்டி வரும். சீனா தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு, கடந்த மாதத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இம்முறை, எல்லை விவகாரத்தில், இந்தியா சீனாவின் பெயரை எங்கேயும் பயன்படுத்தவில்லை. இந்திய தரப்பிலான எல்லா அதிகாரிகளும் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். 2017ம் ஆண்டில் அஸ்தானா உள்ளிட்ட பகுதிகளில் சீனா பலமுறை ஆக்கிரமிப்பு செய்திருந்தபோதிலும், இந்தியா இதே நடைமுறையை பின்பற்றியிருந்தது நினைவுகூரத்தக்கது.
ஜூன் 17 : எல்லையில் நடைபெற்றுள்ள மோதல் விவகாரத்தால், இருநாடுகளுக்கிடையே உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில், சீனா தனது தவறை உணர்ந்து தன் நடவடிக்கைகளை திருத்திக்கொள்ள வேண்டும். ஜூன் 6ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கையின்படி இருநாடுகளும் நடந்துகொள்ள வேண்டும். எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், சர்வதேச விதிகளின்படி, இரண்டு நாட்டு படைகளும் நடந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எந்தவொரு நாடும் தன்னிச்சையாக நடந்துகொள்ளக்கூடாது என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்.
ஜூலை 5 : எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணித்தால் மட்டுமே, இருநாட்டு உறவுகளும் வலுப்படும். எதிர்காலத்தில் பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படக்கூடிய நிலை ஏற்படும் எனவே, இருநாடுகளும் சர்வதேச விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.
முன்னேற்றம்
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு சீனாவே காரணம் என மத்திய அரசு கடந்தமாதம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இம்முறை, இந்த விவகாரம் துவக்கத்திலேயே களையப்பட வேண்டும், இருநாடுகளும் இந்த விவகாரத்தில் ஒத்த கருத்தினை வரவழைத்து முன்னேற்றம் காணவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஜூன் 17 : எல்லை விவகாரத்தில் சர்வேதேச விதிகள் மீறப்படாமல் காக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமையை உருவாக்கி எல்லையில் அமைதி காணும் நடவடிக்கைகளில் இருநாடுகளும் ஈடுபட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருந்தது.
ஜூலை 5 : இந்திய - சீன எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருநாட்டு படைகளும் முதலில் திரும்பப்பெற வேண்டும். எல்லைப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் அசாதாரண சூழலை களையும் நடவடிக்கைகள் இருதரப்பிலும் எடுக்கப்பட வேண்டும். இருநாடுகளும், எல்லைப்பகுதியில் குவித்துள்ள படைகளை படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும். சர்வதேச விதிகளை இருநாடுகளும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். எந்தெவாரு நாடும், இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூாது. தற்போது நிகழ்ந்துள்ள மோதல் போன்ற விவகாரங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இருநாடுகளின் தரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டன.
சீனாவின் அறிக்கைகள்
கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம், சர்வதேச அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சீனா, இவ்விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை சீனா துவக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜூன் 17 : எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியை இந்திய படையினர் தொடர்ந்து தாண்டி வந்ததாலேயே அவர்கள் எச்சரிக்கப்பட்டனர். அவர்களது இந்த நடவடிக்கையை தொடர்ந்ததாலேயே, சீன படையினர் தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று. தாக்குதல் நடந்தவுடனே, வாங் யி தலைமையில், இந்திய தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியா தொடர்ந்து சர்வதேச விதிகளை மீறுவதாக பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினோம். இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கைகளில் இந்தியா மீண்டும் ஈடுபடாது என்று நம்புகிறோம். சர்வதேச எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதில் சீனா உறுதியுடன் இருப்பதாக அதன்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 5 : எந்த நாட்டையும் குறிப்பிட்டு பேசாமல், எல்லை விவகாரத்தில் இருநாடுகளும் ஒன்றிணைந்து ஈடுபட்டு சர்வதேச அளவிலான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் எ்னறு குறிப்பிட்டுள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தை
ஜூன் 17 : சீன - இந்திய எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும். இந்த அமைதி நடவடிக்கைகள் தான் எதிர்காலத்தில், இரண்ட நாடுகளும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட வழிவகுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 5 : சீனா - இந்தியா நட்புறவின் இது 70ம் ஆண்டு கொண்டாட்டம் ஆகும். இந்தநேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது துரதிர்ஷ்டவசமானது. கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தில், சீனாவின் நிலை தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சீனா, அண்டைநாடுகளிடையே சுமூகமான உறவையே விரும்புகிறது. எல்லையில்ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை பேச்சுவார்த்தகளின் மூலம் தீர்க்க சீனா உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்களின் கருத்தொற்றுமை
எல்லை விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன குஅதிபர் ஜி ஜிங்பிங் இடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டு போன்ற நிகழ்வு மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர்.
ஜூன் 17 : எல்லை விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்ககைகள் இருநாட்டு தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு சர்வதேச அளவில் அமைதி பேணப்பட வேண்டும்.
ஜூலை 5 : இவ்விவகாரத்தில் இருநாடுகளிடையே அமைதி ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அமைதி ஏற்படுத்துவதன் மூலமே, இருநாடுகளிடையேயான உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்று இருநாடுகளும் நம்புகின்றன. எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை , இருநாடுகளும் விலக்கிக்கொள்ள முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
ஜூன் 17 : கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் தொடர்பாக, அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமைதி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தவிவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
ஜூலை 5 : சிறப்பு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லை விவகாரத்தில் சுணக்கம் ஏற்படும் பட்சத்தில், அது இருநாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அமைதியை நிலைநாட்டி, இருநாடுகளுக்கிடையே நட்புறவு எனும் பாலத்தை கட்டமைப்பதில் உறுதி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிகள், வெளியுறவுத்துறை செயலாளர்கள், அமைச்சர்கள் இடையிலான சந்திப்பின் பலனாக எல்லைப்பகுதியில் அமைதி திரும்பியுள்ள நிகழ்வை இருநாடுகளும் வரவேற்கிறது. ராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பில், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப்பெறுவது குறித்த விவகாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பலனாக, விரைவில் படைகள் திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Galwan to now: How India and China lowered the rhetoric
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.