லடாக்கின் கிழக்கு பகுதியில் சீனாவுடனான ஏழு மாத கால எல்லை மோதலில் இந்தியா சோதிக்கப்படுவதாக இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். எந்த சோதனையும் கடந்து, இந்திய தனது சவாலை எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய தொழில் துறை கூட்டு சம்மேளனத்தின் 93வது ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கிழக்கு லடாக்கில் நடந்தது உண்மையில் சீனாவுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் இல்லை, ஏனெனில் எல்லை மோதல் இந்திய மக்களின் உணர்வை கணிசமாக பாதித்துள்ளது " என்று தெரிவித்தார்.
உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு நெடுகே நடக்கும் சம்பவங்கள் மிகவும் கவலையடையச் செய்வதாக தெரிவித்த வெளியுறவு அமைச்சர் ஜெயஷங்கர் தெரிவித்தார்.
மோதல் போக்கு தொடருமா? (அ) எல்லைப் பகுதியில் முன்னேற்றங்கள் விரைவில் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,“இது எளிதானதா? இல்லையா? காலக்கெடு என்ன? போன்ற கணிப்புக்குள் தான் செல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
எல்லைப் பகுதியில் சீனா கடந்த 7 மாதங்களாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பரஸ்பர ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், " உண்மையில் இது சீனாவுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்று நான் நம்புகிறேன். சீனாவை பற்றிய இந்திய மக்களின் உணர்வுகளில் கணிசமாக மாற்றம் வந்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக,தொழில் ரீதியாக இந்திய மக்கள் சீனாவை எப்படி உணருகிறார்கள் என்பதற்கான பரிணாம வளர்ச்சியை நான் கண்டிருக்கிறேன், ”என்று அவர் கூறினார்.
"ஆம், நாம் சோதிக்கப்படுகிறோம். சந்தர்ப்பத்தை சாதக மாக பயனபடுத்திக் கொள்வோம் என்ற முழு நம்பிக்கையும் உள்ளது; நாட்டின் பாதுகாப்பு சவாலை சந்திப்போம். ஒவ்வொரு சவாலையும் முறியடிப்போம், ”என்று ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியாவும், சீனாவும் தங்களது எல்லைப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமாக இருந்த எல்லையை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. புவியியல் கொள்கை, ஒப்பந்தங்கள் வரலாற்று நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த எல்லை மீது இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. பாரம்பரியமாக வழக்கத்தில் இருந்து வந்த எல்லைக்கோடு பற்றி சீனா மாறுபட்ட கருத்து கொண்டுள்ளது.