Krishn Kaushik
கிழக்கு லடாக் பகுதியின் சர்ச்சைக்குள்ளான பகுதிகளில், ராணுவ தளபதி ஜெனரல் நாராவனே ஆய்வு நடத்தியுள்ள நிலையில், எல்லைகளில் வாலாட்ட நினைத்தால், சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இந்திய படைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சீனா, பாகிஸ்தான் நாட்டுடன் ராணுவம், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர ரீதியாக இணைந்து செயல்பட்டு வருவதாக US-India Strategic Partnership Forum (USISPF) conclave நிகழ்ச்சியில், ஜெனரல் பிபின் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
ராவத் மேலும் கூறியதாவது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில், அந்நாடு, சீனாவுடன் இணைந்து ராணுவ, பொருளாதாரம் மட்டுமல்லாது ராஜதந்திர ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதிகளில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப, இந்தியா தனது பாதுகாப்பு அம்சங்களில் பல்வேறு முன்னேற்பாடு திட்டங்களை வகுத்துக்கொண்டு வருகிறது.
இந்தியாவிற்கு இருபக்கங்களிலிருந்து தாக்குதல் அபாயங்கள் இருப்பதால், இதில் எதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை கணித்து அதற்கேற்ப செயல்முறைத் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறோம்.
இந்தியாவிற்கு சீனா குடைச்சல் அளித்தால், அதனை ஒடுக்கும் நேரத்தில், பாகிஸ்தான் அதன் எல்லைப்பகுதிகளில் இருந்து தொந்தரவு தர திட்டமிட்டால், அதை முறியடிக்கும் விதத்திலும், இந்திய படைகள் தயாராக உள்ளன. பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டால், அது பெரும் இழப்பை சந்திக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பிராக்ஸி போரில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் வழியா இந்தியாவிற்குள் ஊடுருவி பெரும்தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளுக்கு தேவையான பயிற்சி, ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை, பாகிஸ்தான் தொடர்ந்து செய்துவருகிறது.
இந்தியா, தற்போதைய அளவில் சீனாவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளபோதிலும், இந்த கூட்டுபயிற்சி வருங்காலங்களிலும் தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 1993ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும்நிலையில், சீனா அந்த ஒப்பந்தத்தை சமீபகாலமாக தொடர்ந்து மீறிவருகிறது.
இந்தியா, அனைத்து நாடுகளிடையேயும் சகோதரத்துவத்தை கடைப்பிடித்து அமைதியை கடைப்பிடிக்கவே விரும்புகிறது. அதற்காகவே அந்த ஒப்பந்தங்களின்படி, இந்தியா செயல்பட்டு வருகிறது. சீனா, சமீபகாலமாக அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு தக்க பதிலடி அளிக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. எல்லைப்பகுதிகளில் எந்த பகுதிகளிலிருந்து தாக்குதல் நடந்தாலும் அதனை துரிதமாக முறியடிக்க இந்தியாவின் ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை தயார்நிலையில் உள்ளது.
சீனா தனது ஆதிக்கத்தை, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்காசிய பகுதிகளில் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் அது தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.
எதிரி நாடுகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், நமது படைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைப்பகுதிகளில் மட்டுமல்லாது, இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் நமது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிவரும் நிலையில், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இந்தியா மீது தொடுக்கப்படும் எவ்வித தாக்குதல்களையும் முறியடிக்கும் வகையில் இந்தியா மேம்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டுடனான கடல்பகுதிகளில் சுதந்திரமான மற்றும் முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, எந்தவொரு நாடும், கடற்பகுதியில் தங்களது ஆதிக்கத்தை அதிகரிக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட ராணுவ தளபதி ஜெனரல் நாராவனே கூறியதாவது, சுசுல் செக்டர் பகுதி, பாங்கோங் சோ மற்றும் ரெசின் லா பகுதிகளுக்கு இடைய அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வெற்றிடங்களை இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, சீனா எவ்வகையிலும் இந்திய பகுதிகளில் உள்நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
லே பகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வந்த நாராவனே, அங்கு ராணுவ அதிகாரிகளிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உரையாற்றினார்.
விமானப்படை தளபதி ஏர்சீப் மார்ஷல் பதுரியா, மேற்குவங்க மாநிலத்தில் அமைந்துள்ள ஹஸிமாரா மற்றம் கலாய்குண்டா விமானப்படை தளங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். எவ்வித தாக்குதல்களையும் நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அங்கு அதிகாரிகளுக்கு பதுரியா உத்தரவிட்டுள்ளதாக விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு எல்லைப்பகுதியில் சீனா வாலாட்டி வரும் நிலையில், ஷில்லாங்கில் அமைந்துள்ள ஈஸ்டர்ன் ஏர் கமாண்டட் தலைமையகம், துரித நேரத்தில் சரியான முடிவுகளை செயல்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.