Advertisment

துப்பாக்கி சூட்டை இந்தியா முயற்சிக்கவில்லை: ராணுவம் விளக்கம்

சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
துப்பாக்கி சூட்டை இந்தியா முயற்சிக்கவில்லை: ராணுவம் விளக்கம்

திங்களன்று கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைத்  தாண்டி, இந்தியா ராணுவம் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் சீனாவின் செய்திக் குறிப்பை இந்திய இராணுவம் மறுத்துள்ளது. பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் இந்தியா தெரிவித்தது.

Advertisment

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்," எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை.

ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது.

செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள இந்திய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும்,  இந்திய ராணுவப் படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன.

அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

திங்களன்று, பெய்ஜிங் நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு, சீன ராணுவத்தின் வெஸ்டன் தியேட்டர் கமாண்ட் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்திய இராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து,  சீன-இந்திய எல்லையின் மேற்குப் பகுதியான பாங்காங் ஹுனான் என்ற பகுதி  வரை அத்துமீறி நுழைந்தது” என்று குறிப்பிட்டிருந்தது

"இந்த நடவடிக்கையின் போது, ​ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  எல்லை வீரர்களை இந்திய இராணுவம் அச்சுறுத்தியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீனப்  படையினர் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.  இந்தியாவின் இந்த நடவடிக்கை இந்தியா-சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை கெடுக்கும் வகையில் உள்ளது, ”என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவை "மோசமான தூண்டி விடும் போக்கு தன்மையுடவை என்று தெரிவித்த சீனா ராணுவம், ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திடுமாறு தெரிவித்தது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்ட வீரர்களை அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சீனா தனது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.  சீன மக்கள் விடுதலை ராணுவம் தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாங்கோங் சோ மற்றும் ரெசின் லா பகுதிகளுக்கு இடைய அமைந்துள்ள சுசுல் செக்டர் (Chushul sector) பகுதியில் உள்ள வெற்றிடங்களை இந்தியா தன்வசப்படுத்தியது. இந்த பகுதியில் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, சீனா எவ்வகையிலும் இந்திய பகுதிகளில் உள்நுழைய முடியாத நிலையை, இந்திய ராணுவம் மேற்கொண்டிருந்தது.

எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நிலவிவரும் அசாதாரண சூழலை தணிக்கும் பொருட்டு, செப்டம்பர் 4ம் தேதி லடாக் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ராணுவ தளபதி ஜெனரல் நாராவனே, அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். எல்லைப்பகுதியில், அண்டை நாடுகள் வாலாட்டினால், அவர்களுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என்று அப்போது நாராவனே எச்சரித்திருந்தார்.

முன்னதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவில், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் Wei Fenghe-வுடன் பேச்சுக்கள் நடத்தினார். சீன அமைச்சரின் விருப்பத்தின் பேரில் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றன. மோதல் போக்கை கடைபிடிக்கும் வகையில் படைகளைக் குவிப்பது, எல்லையில் அமைதியை சீர்குலைக்க முயலும் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளது என்று  இந்தியா சீனாவிடம் தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment