இந்திய எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், ராணுவ அதிகாரி, படைவீரர்கள் உள்ளிட்ட 3 பேர் வீரமரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்புப்படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டம், 90 நிமிடங்கள் நடைபெற்றிருந்தது.
இந்திய எல்லையில், சீன ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து, பிரதமர் மோடியிடம் அமைச்சர் ராஜ்நாத் சிங் விவரித்திருந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக, இந்திய ராணுவம்,செவ்வாய்க்கிழமை ( ஜூன் 16ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எல்லையில் பதட்டத்தை தணிக்கும்வகையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஜூன் 15ம் தேதி இரவு, எல்லைப்பகுதியில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு, இந்திய படைகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இதன்காரணமாக, இருதரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்திய தரப்பில், ராணுவ அதிகாரி, படைவீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இருநாடுகளின் அதிகாரிகளும் அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், பெரும்பின்னடைவாக கருதப்படுகிறது.
எல்லையில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக, உடனே விவாதிக்க வேண்டும் என்று சீனா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டநிலையில், காலை 7.30 மணியளவில் துவங்கிய கூட்டம், நண்பகல் வரை நீடித்ததாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த இந்த தாக்குதல் குறித்து இரு நாடுகளின் தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
கல்வான் பள்ளத்தாக்கின் வடக்குப்பகுதி மற்றும் பங்காங் சோ பகுதியின் 14,15 மற்றும் 17 ஏ நிலைகளில் இந்திய படைகளும் ரோந்து பணிகளை மேற்கொள்ள இருப்பதாக ராணுவ தளபதி, ஜெனரல் எம் எம் நரவானே, கடந்த சனிக்கிழமையே தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியாவின் இந்த கோரிக்கையை, சீனா நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்காங் சோ பகுதி, இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள முக்கியமான பகுதி ஆகும். இந்த பகுதியிலிருந்து, மேற்கே 8 கிமீ தொலைவிற்கு, சீனா, தனது படைகளை கணிசமான அளவில் நிறுத்தியுள்ளது. இது, சர்வதேச எல்லைவிதிகளுக்கு முரணானது என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுமட்டுமல்லாது, பங்காங் சோ ஆற்றின் கரையின் வடக்குப்பகுதியில் நான்காம் நிலையிலும், இந்தியப்படைகள் நுழைவதை, சீனா தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியப்படைகள், முன்பு, 8ம் நிலை வரை ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்தது. எல்லைகட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில், இந்தியாவிற்கு சொந்தமான 60 சதுர கிமீ அளவிலான இடத்தையும் சீனா ஆக்கிரமித்துள்ளது
நான்காம் மற்றும் எட்டாவது நிலைகளுக்கிடையேயான பகுதியில், சீனப்படைகள் குடில்கள் அமைத்து தங்கியுள்ளது, மே 27-ம் தேதி வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக தெரிகிறது. இந்த நிலைகளிலிருந்து சீனப்படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
எல்லையில் பதட்டத்தை தணிப்பதற்காக, மே 5ம் தேதி, இருநாட்டு அதிகாரிகள், செயலாளர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. இதற்குபிறகு, தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் விவகாரத்தினால், பேச்சுவார்த்தை மேலும் கடினமாகியுள்ளது. எல்லையிலிருந்து படைகளை திரும்பப்பெறுதல், பதட்டத்தை குறைத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தி, இரு நாடுகளுக்கிடையே, அமைதி தீர்மானத்தை ஏற்படுத்த விழைவதே, தற்போதைய முக்கிய தேவையாக மாறியுள்ளது.
1975ம் ஆண்டில், அருணாச்சல பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில், சீனப்படைகள், ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த இந்திய படைகள் மீது நடத்திய தாக்குதலில், உயிர்ச்சேதம் ஏற்பட்டிருந்தது. அதற்குப்பிறகு 45 ஆண்டுகள் கழித்து, தற்போது நிகழ்ந்திருக்கும் தாக்குதலில், இருதரப்பிலும் உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.