இந்தியாவில் ஏப்ரல் 27ம் தேதி நிலவரப்படி, 21,632 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இவர்களில் 80 பேர் மட்டுமே வெண்டிலேட்டரில் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சையை, பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை நிரந்தர தீர்வு என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த சிகிச்சையை,தகுந்த ஒப்புதலோடு மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1594 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 29.974 ஆக அதிகரித்துள்ளது. 51 பேர் புதிதாக மரணமடைந்துள்ள நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,16,733 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ( மருத்துவமனைகள் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்) ஏப்ரல் 26ம் தேதி நிலவரப்படி, 2.17 சதவீதம் பேர் ஐசியூவில் உள்ளனர். 1.29 சதவீதம் பேருக்கு பிராண வாயு (ஆக்சிஜன்) வசதி செய்துதரப்பட்டுள்ளது. 0.36 பேர் வெண்டிலேட்டரில் உள்ளனர். 23.3 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, தினமும் 10 முதல் 15 நபர்களுக்கு வெண்டிலேட்டர் வசதி தேவைப்பட்ட நிலையிங், தற்போது ஒட்டுமொத்தமாக 80 பேர் மட்டுமே வெண்டிலேட்டர் வசதியில் இருப்பதாக வந்துள்ள தகவல், இந்தியா, கொரோனா கட்டுப்பாட்டில் மேம்பாடு அடைந்துள்ளதையே எடுத்துரைப்பதாக உள்ளது. இன்னும் சில நாட்களில் பாதிப்பு மேலும் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் தற்போது பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டில் இந்தியா தீவிர நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதால், பாதிப்பு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது, கொரோனாவுக்கு தேவையான சிகிச்சைகளில் ஒன்றாக சில மாநிலங்கள் தற்போது பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றன. பிளாஸ்மா சிகிச்சையினால், கொரோனா பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், பிளாஸ்மா சிகிச்சை தொடர்பான ஆய்வுகளை துவக்கியுள்ளது. ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வோர் அதற்கான ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள டுவிட்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா பாதிப்புக்கு இதுவரை இதுதான் சிகிச்சை என்று எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், தற்போது வழக்கமான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் சுகாதாரத்துறையும் இதுகுறித்த ஆய்வுகளில் தற்போது ஈடுபட்டுள்ளது. பிளாஸ்மா சிகிச்சையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆன்ட்டிபாடி அளவிலான சோதனைகள் உள்ளிட்டவைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்மா சிகிச்சை பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி நுரையீரலை சேதப்படுத்தி உயிரை பறித்து விடும் என்பதால், மிகுந்த கவனத்துடன் இதை மேற்கொள்ளவும்.
கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அது எதிர்பார்த்த அளவு முடிவுகளை வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதுதொடர்பாக, நீண்ட ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 28 நாட்களில், நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இந்த பட்டியலில், மேற்குவங்கத்தின் கலிம்போங் மற்றும் கேரளாவின் வயநாடு புதிதாக இணைந்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த பீகார் மாநிலத்தின் லகிசராய் நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகமே கொரோனா பீதியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது, இந்தியாவும் அதற்கு தப்பிவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் மாநிலத்தில் மற்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளிலும் எவ்வித சமரசமும் செய்துகொண்டுவிடக்கூடாது. டயாலிசிஸ், ரத்த மாற்று சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டுமென்று மாநி, அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீதி சுதன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ சேவை மீதுள்ள நம்பிக்கையை மக்களுக்கு குறையாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூடுதல் செயலாளர் வந்தனா குர்மானி ஏழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.