/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-2020-08-29T165351.684.jpg)
நேற்று, அசாம் மாநிலத்தின் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டிய நிலையில், இந்தியாவில் மோசமாக பாதிப்பைக் கண்ட முதல் பத்து மாநிலங்களில் அனைத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளன.
அதேசமயம், நேற்று 29 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டதன் மூலம், மிசோரம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், லட்சத்தீவைத் தவிர நாட்டில்லுள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் குறைந்தது 1,000 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், இதுநாள் வரையில் லட்சத்தீவுகளில் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை.
மேலும் வெள்ளிக்கிழமை, ஆந்திராவின் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியது. இன்னும் ஓரிரு நாட்களில், தமிழகத்தை முந்திக்கொண்டு நாட்டின் இரண்டாவது மிக மோசமாக பாதிப்படைந்த மாநிலமாக மாற உள்ளது. சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த ஆந்திரா, தற்போது ஒவ்வொரு நாளும் 10,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து. இந்த காலகட்டத்தில், அதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டரை மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது. ஆந்திராவுக்கு அடுத்தப்படியாக, அதன் தினசரி வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக வளர்ந்தது. இருப்பினும், அசாம் மாநிலம் இந்தியாவில் மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையைக் (0.3%) கொண்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை விட தற்போது கேரளாவில கொரோனா பரவல் வேகமாக உள்ளது. கேரளாவின் தினசரி வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதத்திக்கும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில்,தேசிய வளர்ச்சி விகிதம் 2.18 சதவீதமாக உள்ளது. கொரோனா பரிசோதனை அதிகரித்திருப்பதன் காரணமாக, பதிவாகும் கொரோனா எண்ணிக்கையும் கேரளாவில் அதிகரித்து வருகிறது.
இதேபோன்ற போக்கைக் காணும் மற்றொரு மாநிலமாக தெலுங்கானா உள்ளது. ஜூன் நடுப்பகுதி வரை கொரோனா பரிசோதனையில் மோசமான பதிவைக் கொண்டிருந்தது. பின்னர், நீதிமன்ற தலையீட்டுக்குப்பின் பரிசோதனையை முடுக்கிவிட்டு, புதிய பாதிப்புகளை விரைவாக கண்டறியத் தொடங்கியது. தொடர்ந்து இரண்டு வாரங்களில், தினமும் 60,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதிக்கிறது. தற்போது, தினசரி, பாதிப்பு எண்ணிக்கை 2,500-3,000 என்றளவில் உள்ளது .
வெள்ளிக்கிழமை மேலும் ஒரு நிகழ்வாக, இந்தியாவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,28,761 மாதிரிகளை இந்தியா பரிசோதித்துள்ளது. இந்தியா ஏற்கனவே, நாள் ஒன்றுக்கு 10 லட்சம் சோதனைகள் செய்யும் திறனைப் பெற்றுள்ளது. சீனா இதுவரை 9 கோடிக்கும் அதிகமான சோதனைகளை நடத்தியுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா 8 கோடிக்கும் அதிகமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது.
பத்து லட்சம் பேருக்கு 29,280 சோதனைகள் என்ற விகிதத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தலைமையிலான கொள்கைகள், மாநில/ யூனியன் பிரதேச அரசுகளால் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக, குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரிப் பரிசோதனையின் அதிகரிப்பு தொடர்ந்து சராசரியாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதத்தில் குறைவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சராசரியாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 8.57 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மேலும் குறைந்து கொண்டே வருகிறது.
வெள்ளிக்கிழமை, ஒரு நாளில் மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76,000 க்கும் அதிகமாக இருந்தன. இறப்பு எண்ணிக்கை 62,500 ஐ தாண்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.