2.4 சதுர கி.மீ, 8.5 லட்சம் மக்கள் : மும்பை தாராவியில் சமூக விலகல் சாத்தியமா?

இந்த பூமியில் மிகவும் அடர்த்தியான மனித வாழ்விடங்களில் ஒன்றாக, ‘தாராவி’ கருதப்படுகிறது. தாராவியின்  வாழ்விடங்களின் தன்மைகள் தெரிந்த பின்னும், இன்னும் அவர்கள் சமூக விலகலை  பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது நகைச்சுவையானது.

கைக்குட்டைகளை முக கவசம் போல் அரைகுறையாக அணிந்து கொண்டு, சாலைகளில் ஆங்காங்கே  நாலு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுவாய் மக்கள் நின்று கொண்டிருக்கும் வேளையில், காரத் ரஹா, பஹெர் பாடு நாகா (உட்புறமாக இருங்கள், வெளியேற வேண்டாம்)” என்று தாராவி கரிப் நகர் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரின் ஒலிபெருக்கி தொடர்ந்து எச்சரிக்கின்றது. இந்த குறிப்பிட்ட சாலையில் மட்டும் காவல்துறையினர் 15 நிமிடங்களுக்கும் அதிகமாக எச்சரிப்பது  இது ஐந்தாவது முறையாகும். எவ்வாராயினும், கோவிட் – 19 தொடர்பான எச்சரிக்கைகள் அங்கு கவனிக்கப்பட வில்லை. எதையும் பொருட்படுத்தாமல், குடிசைப் பகுதியின் வழிதடங்களில் நடக்கும் சிலர் காவல்துறையின் தடியடிகளை, சத்தமில்லாமல் தங்கள் காலில் வாங்கி செல்கின்றனர். காவல்துறையினர் அந்த இடத்தை விட்டு கிளம்பிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அதே மக்கள், அதே சாலை, அதே ஐந்து பேர் கொண்ட குழு , அதே விதிமீறல்……… இது தான் தாராவி பகுதியின் இன்றைய எதார்த்தம்.

2.4 சதுர கி.மீ பரப்பளவில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைக் குடியிருப்பான (சேரிப்பகுதி) தாராவி பகுதியில், சுமார் 60,000 குடும்பங்கள், 8.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த பூமியில் மிகவும் அடர்த்தியான மனித வாழ்விடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கோவிட்- 19  தொற்று  இங்கு தோன்றத் தொடங்கியதும், சமூக பரவுல் தொடர்பான கேள்வி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது .

ஒரு 10-க்கு 10 அடி அறைக்குள், குறைந்தது 9 (அ) 10 பேர், தொடர்ச்சியாக உள்ளிருக்க வைப்பதை  உறுதி செய்வது காவல்துறைக்கும்,சுகாதார நிர்வாகத்திற்கு எட்டாத பெரும் கனவு தான். 90 அடி சாலையில் வசிக்கும் அஞ்சு சவுகான் கூறுகையில் (இல்லத்தரசி) ,“இந்த சிறிய  இருப்பிடத்திற்குள் ஏழு பேர் வசிக்கின்றோம். அதில், மூன்று 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள். எனது இளைய குழந்தையின் வயது இரண்டு மட்டுமே. நாள் முழுவதும் இந்த சின்ன இருப்பிடத்திற்குள்  இருந்தபின்,அவன்  மிகவும் அமைதியற்றவனாக இருக்கிறான். எனவே, அவனை சமாதனபடுத்தும் விதமாக, என் கணவர் அவ்வப்போது வீட்டிற்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை.  குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்வதற்காக கிட்டத்தட்ட நாள் முழுவதும் நாங்கள் கார்ட்டூன் சேனல்களை ஓட விடுகின்றோம்,” என்றார்.

ஜி-நார்த் வார்டின், காவல்துறை உதவி ஆணையர் கிரண் திகாவ்கர் கூறுகையில்,“தாராவியின்  வாழ்விடங்களின் தன்மைகள் தெரிந்த பின்னும், அவர்கள் இன்னும் சமூக விலக்கலை  பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது நகைச்சுவையானது” என ஒப்புக் கொண்டார்.

தாராவி சாலையில் வசிக்கும் உள்ளூர் சமூக சேவகர் ஷங்கர் சங்கம், “அறைகள் சிறியவை, காற்றோட்டம் இல்லை. வெப்பம் இங்கு முக்கிய காரணியாக உள்ளது. மக்கள் வேறு வழியில்லாததால்  வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். இங்கு பொதுவான கழிப்பறைகள் தான் அதிகம். ஒரு கழிப்பறையில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் நிலைமை உள்ளது. நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை கூற முயற்சிக்கிறோம், வெறும் ஆலோசனைகள் மிகவும் கடினமானவை” என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரும்,பள்ளி கல்வித்துறை அமைச்சருமான வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், “சவால்கள் இருப்பது உண்மை தான். அதை சந்திக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. தற்போது,எங்களது முழு கவனமும் சுத்தப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் தான் உள்ளது,” என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி கண்டறியப்பட்ட குறியீட்டு நோயாளி, தாராவியில் மிகவும் ஆடம்பரமான பகுதியாக கருதப்படும் பாலிகா நகரில் ஒரு உயரமான கட்டிடத்தில் வாழ்ந்தவர். தப்லிக் ஜமாத்தின்  உறுப்பினர்களை, அருகிலுள்ள தனது பிளாட்டில் இவர் தங்க வைத்திருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இவரோடு, தொடர்பில் இருந்த அனனைவரும்  உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உண்மையில், ஏப்ரல் 3-ம் தேதி தாராவி முகுந்த் நகரில் மூன்றாவது நபர்  கண்டறியப்பட்ட பின்னரே, தப்லிக் ஜமாத் தொடர்பான இணைப்பு வெளிச்சத்துக்கு வந்தது.  இந்த பகுதியில், ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர்,  பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

நிர்வாகம் மிகவும் தயார் நிலையுடன் செயல்பட்டது. “வோர்லி கோலிவாடா பகுதியில் இருந்து பெறப்பட்ட  அனுபவம் (கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் குடிசை குடியிருப்பு ) எங்களுக்கு பலனளித்தது. தொடர்பு தடமறிதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை   உடனடியாக விரிவுபடுத்தினோம்,” என்று திகாவ்கர் கூறினார். இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வரை, தாராவியில் ஒன்பது இடங்களில் கோவிட்- 19 நோய் பரவியுள்ளது. 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

அதிக ஆபத்துள்ள தொடர்புகளை நிர்வாகம் முன்கூட்டியே தனிமைப்படுத்தியது, இல்லையேல் இங்கு நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கும். கோவிட்- 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தாராவியில் செயல்படும் சாய் மருத்துவமனையில் 50 படுக்கைகள் நாங்கள் ஒதுக்கியுள்ளோம் . ராஜீவ் காந்தி விளையாட்டு வளாகத்தில், தனிமைப்படுத்தலுக்கான 300 படுக்கைகள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர, நகராட்சி பள்ளி வளாகத்தில் 700 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தல் முகாமை அமைத்து வருகிறோம் என்று திகாவ்கர் மேலும் கூறினார்.

அதிக ஆபத்துள்ள தொடர்புகளை தனிமைப்படுத்தி சோதிப்பதில், எங்களின் முழு கவனமும்  உள்ளது. கோவிட் – 19 உறுதி செய்யப்பட்ட  43 பேரில், ஒன்பது பேர் ராஜீவ் காந்தி விளையாட்டு வளாகத்தில், அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வந்தவை; இதை பார்க்கையில் எங்கள் முயற்சி சரியான பாதையில் செல்வதாக தெரிகிறது ” என்றும் தெரிவித்தார்.

 

எனினும், தாரவியின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள  இரண்டு மாடி ராஜீவ் காந்தி விளையாட்டு வளாகத்தில் இருந்து வரும்  காட்சிகள்  மிகவும் உற்சாகமாக இல்லை. இரண்டு பெரிய அறைகளில் 107 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டுக்கும் சேர்த்து ஒரே ஒரு  கழிப்பறை தான் உள்ளது.  ஒரு அடி இடைவெளியில் தான் படுக்கைகள்  வைக்கப்பட்டுள்ளன. முகுந்த் நகரில்  தங்கியிருந்த 36 வயதான செவிலியர் வீணா கோலி, தனது கணவருக்கு கோவிட்- 19 நோய் உறுதி செய்யப்பட்டதில் இருந்து இந்த  விளையாட்டு வளாகத்தில் தான்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வீணாவின் மைத்துனருக்கும் கோவிட்- 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீணா இது குறித்து கூறுகையில், ” எங்கள் இரண்டு குடும்பத்திலுள்ள அனைவரும், தற்போது  இந்த வளாகத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். நாங்கள் எங்களின் பரிசோதனை  முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட எங்கள் வீட்டு நபர்களுடன் குறைந்தது மூன்று நாட்கள் ஒன்றாக வாழ்ந்திருப்போம். தற்போது, எங்களுக்கு கோவிட்- 19 சோதனையில் பாசிடிவ் வந்தால் என்ன செய்வது? இந்த இடம் மிகவும் நெரிசலானது. தனிமை கா கோய் மாட்லாப் ஹோடா ஹை கி நஹின்? (தனிமைப்படுத்துதல் என்பதன் பொருள் இது இல்லை தானே?)” என்றார்.

வீணாவின் மைத்துனன கிருஷ்ணா ரெட்டி கூறுகையில், “நாங்கள் செவன் ஹில்ஸ் மருத்தவமனையில் நன்றாக நடத்தப்படுகிறோம். ஆனால், எனது குடும்பம் சிரமப்பட்டு வருகிறது. எனக்கு மூன்று வயது மகன் இருக்கிறன். முகக்கவசம், சமூக விலக்கல் அவர்களுக்கு புரியாது.  அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தயங்கவில்லை. ஆனால், சரியான வசதிகள்  வழங்கப் பட்டிருக்கலாம்.  ஏதேனும்,  குடியிருப்பு  அல்லது தனி அறைகளில்  கொடுத்திருக்கலாம்.  இவ்வளவு… ஏன் எங்கள் சொந்த வீட்டிற்குள் வைத்து  பூட்டியிருக்கலாம்” என்றார்.

விளையாட்டு வளாகம் வெளியில் அமர்த்தப்பட்டிருக்கும் காவலர் ஒருவர்,” இவர்களில் சிலர் மிகவும் ஆக்ரோஷமானவர்கள். அவர்கள் ஓடிவிட்டால், அவர்களை நாங்கள்  எப்படி பிடிப்போம்? அவர்களின் அருகில் செல்லும் போது, எங்களுக்கு நோய் தொற்று வந்துவிடுமோ? என்ற கவலையும் எங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

அதிகாரிகளிடம் முறையாக திட்டமிடல் இல்லை என்பது உள்ளூர் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சமுதாய சமையலறை மற்றும் சிவ் போஜன் உணவு மையத்தை நடத்தி வரும் அஸ்லம் தவுலத் கான்,“வீடு வீடாக உணவு பாக்கெட்டுகள் மற்றும் ரேஷனை வழங்குவதை பிரிஹன்மும்பை நகராட்சி  உறுதி செய்திருக்க வேண்டும். கொரோனாவை விட மக்கள் பட்டினியால் இறப்பதைப் பற்றி அதிகம் பயப்படுகிறார்கள்  (அகர் கானா மில் ஜாயே தோ லாக் பஹார் கியோன் நிக்லெங்கே? மவுட் சே தோ சப் ஹார்தே ஹைன்). ” என்றார்.

பிரிஹன்மும்பை நகராட்சி (பிஎம்சி), தாராவி பகுதிக்குள் அதிகம் ஆபத்துடைய ஐந்து சிவப்பு மண்டலங்களை அறிவித்துள்ளது. வரும் நாட்களில், இங்குள்ள 50,000 குடியிருப்பாளர்களையும் பரிசோதனை  திட்டமிட்டுள்ளது.  திகாவ்கர் கூறுகையில், நாங்கள் துல்லிய இலக்கை நோக்கி நகர்கின்றோம்.பதில் தாக்குதல் தான் எங்கள் சிறந்த பாதுகாப்பு. இந்த தாராவி பகுதியைச் சேர்ந்த 24 தனியார் மருத்துவர்கள், கோவிட்- 19  தொடர்பான போரில் பி.எம்.சி- யுடன் கைகோர்த்துள்ளனர், என்று தெரிவித்தார்.

 

நூற்றாண்டுகள் பழமையான கும்பர்வாடா பகுதியில், 300க்கும் அதிகமான மட்பாண்டங்கள்  செய்யும் குடும்பங்கள் உள்ளன. 38 வயதான யூசுப் குல்வானி, “ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து நாங்கள் வீட்டிற்குள் தங்கியிருந்தாலும், பலர் எங்கள் தெருக்களை கடந்து செல்கின்றார்கள் . எனவே, நாங்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் வாயில்களை மூடிவிட்டோம்.  இங்குள்ள, குடும்பங்கள் ஏற்கனவே மந்தநிலையின் கீழ் தள்ளி விடப்பட்டுள்னர். எனவே,  நீண்டகால பொது முடக்கம் குறித்து கவலைப்படுகிறார்கள்” என்று  தெரிவித்தார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India covid 19 cases in dharavi asias largest slum bmc

Next Story
22-நாள் கைக் குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ் அதிகாரிIAS officer Gummala Srijana returned to office with her 22-days old kid
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com