இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 3வது நபர் பலியாகியுள்ளார். துபாயில் இருந்து மும்பைக்கு திரும்பிய 63 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. 14 நபர்கள் இதிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து சமீபத்தில் ஜெய்ப்பூருக்கு திரும்பிய 69 மற்றும் 70 வயதினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கு வழங்கப்படும் Lopinavir/Ritonavir தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட நிலையில், அவர்களின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுமட்டுமே தீர்வு அல்ல என்றும், இது மாறுபடும் . அதிக பாதிப்பு உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வருவதற்கான தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இந்த நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள 254 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் தம்மு ரவி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈரானில் உள்ள மற்ற இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள நிறுவனங்கள் செய்துவருகின்றன. அவர்கள் குறித்த தகவல்களை தற்போதைக்கு வெளியிட இயலாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது அரசின் சார்பில் மட்டும் நடைபெற்று வரும் நிலையில், எண்ணற்ற பயணிகளுக்கு இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் பொருட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)), 51 National Accreditation Board for Testing and Calibration Laboratories உடன் இணைந்து செயலாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சார்பாக 72 ஆய்வகங்களிலும், 49 அரசு அமைப்புகளின் மூலமாக கோவிட்-19 பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனைகளை விரிவுபடுத்தும் பொருட்டு 51 National Accreditation Board for Testing and Calibration Laboratories உடன் பணியாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இந்த சோதனைகளுக்கான வேதிப்பொருட்கள் இன்னும் சில தினங்களில் வந்து சேரும். நாட்டு மக்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகளை, மக்களுக்கு இலவசமாக செய்து தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நாள் ஒன்றுக்கு 1400 சாம்பிள்களை ஆய்வு செய்யும் வகையிலான 2 ஆய்வகங்கள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தனியார் ஆய்வகங்களுக்காக, மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினால் பரிந்துரைக்கப்பட்ட டாக்டர்கள் மட்டுமே, இந்த ஆய்வகங்களில் பரிசோதனைகளை செய்ய வேண்டும். ICMR வழங்கும் வேதிப்பொருட்கள் உள்ளிட்டவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தினால் சான்றளிக்கப்பட்ட பின் இந்த ஆய்வகங்களுக்கு வேதிப்பொருட்கள் உள்ளிட்டவைகள் அளிக்கப்படும்.
இந்த தனியார் ஆய்வகங்களின் உறுதி செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள், பின்னர் நாடெங்கும் செயல்பட்டு வரும் 51 ICMR ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் என்று மூத்த விஞ்ஞானி டாக்டர் நிவேதா குப்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மட்டுமல்லாது அவர்களை கையாளும் மருத்துவ ஊழியர்களுக்கும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இதுதொடர்பாக வருபவர்களின் விபரங்கள் தங்களுக்கு அவ்வப்போது அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் தடுப்பு மருந்தாக பயன்படும் Lopinavir/ Ritonavir மருந்துகள், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக சில கேஸ்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இதையே நாம் தீர்வாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுதொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
60 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த Lopinavir/ Ritonavir தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டுகிறது. இது ஹைபோக்சியா, ஹைப்போடென்சன் உள்ளிட்டவைகளை குறைக்க உதவுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, விமான நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தெர்மல் ஸ்கேனர், சானிடைசர் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவிட்-19 தொற்று குறித்த உடனடி தகவல்களை பெற ஹெல்ப்லைன்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து கர்நாடகா திரும்பிய 76 வயது முதியவர் தான், கொரோனா வைரசிற்கு முதலில் பலியாகி இருந்தார். பின், டில்லியில் 68 வயது பெண் பலியாகியிருந்த நிலையில், மும்பையில் 63 வயது நபர் பலியாகியுள்ளதன் மூலம், இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.