இந்தியாவில் நாவல் கொரோனா வைரசின் இறப்பு விகிதம் (கோவிட் -19) 3.3% ஆக உள்ளது. இறந்தவர்களில் 75.3% பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
குறிப்பாக 83% இறப்புகள், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட இதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற ‘இணை நோயுற்ற நிலையில் இருப்பவர்களிடத்தில் நிகழ்ந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் பகுப்பாய்வின்படி, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில், 14.4 சதவீதம் பேர் 0-45 வயதுப் பிரிவையும், 10.3% பேர் 45-60 வயதுப் பிரிவையும், 33.1% பேர் 60-75 வயதுப் பிரிவையும், அதிகபட்சமாக 42.2% பேர் 75 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுப் பிரிவையும் சேர்ந்தவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 957 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. 36 பேர் மரணம் அடைந்துள்ளனர். நாட்டில் இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,792 ஆக உள்ளது. 2,015 பேர் குணப்படுத்தப் பட்டுள்ளனர் / குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை புதிதாக 1,076 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. வியாழக்கிழமை புதிதாக 826 பேருக்கும், புதன்கிழமை 1,118 பேருக்கும் கண்டறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .
நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில், 21.8% பாதிப்பு தப்லிக் ஜமாத் அமைப்பின் டெல்லி மாநாடுடன் தொடர்புடையதாக சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
டெல்லி மாநாட்டால் அதிகம் பாதித்த மாநிலங்களின் புள்ளி விவரங்களும் அதில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் பதிவான 84% கொரோனா வைரஸ் பாதிப்புகள் தப்லிக் ஜமாத் மாநாடுடன் தொடர்புடையது. தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்களில் முறையே 79%,59%, 61% ,91% தப்லிக் ஜமாத் மாநாட்டால் ஏற்பட்ட பாதிப்பு விகிதங்களாகும். டெல்லி நகரில் பதிவான மொத்த பாதிப்புகளில், 63 சதவீதம் தப்லிக் ஜமாத் மாநாட்டுடன் தொடர்புடையதாக உள்ளது.
14 நாட்களுக்கு மேலாக புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யாத பாட்னா (பீகார்), நாடியா (மேற்கு வங்கம்), பானிபட் (ஹரியானா) ஆகிய மூன்று மாவட்டங்கள், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை பதிவு செய்துள்ளது.
இருப்பினும், இந்தியாவின் 12 மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 22 மாவட்டங்கள், தொடர்ந்து 14 நாட்களாக புதிய கொரோனா வைரஸ் பாதிப்பை எதுவும் பதிவு செய்யவில்லை.
இந்த 22 மாவட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு:
லக்கிசராய், கோபால்கஞ்ச் பாகல்பூர் (பீகார் ); தோல்பூர் ,உதய்பூர் (ராஜஸ்தான்); புல்வாமா (ஜம்மு-காஷ்மீர்); தவுபால்(மணிப்பூர்) ; சித்ரதுர்கா (கர்நாடகா) ; ஹோஷியார்பூர் (பஞ்சாப்); ரோஹ்தக் சர்கி தாத்ரி (ஹரியானா); லோஹித் (அருணாச்சல பிரதேசம்) ; பத்ரக், பூரி (ஒடிசா); கரீம்கஞ்ச், கோலாகாட், கம்ரூப் ரூரல், நல்பாரி, தெற்கு சல்மாரா (அசாம்); ஜல்பைகுரி,கலிம்பொங் (மேற்கு வங்கம்); விசாகப்பட்டினம்(ஆந்திரா) .
கர்நாடகாவின் , குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக, புதிதாக எந்த பாதிப்பும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நோய் தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அகர்வால் நேற்று விளக்கி கூறினார். “கண்காணிப்புக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் மக்களைக் கண்காணிக்க ஜி.பி.எஸ் பயன்படுத்தப்பட்டது. வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நூறு சதவீதம் நிறைவு பெற்றது ”என்று பத்திரிகையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தொற்று நோயியல் மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தல் பிரிவித் தலைவரும், மருத்துவ நிபுணருமான ஆர்.ஆர் கங்ககேத்கர் கூறுகையில், "கோவிட் -19 நோய்க்கான சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையின் செயல்திறனைக் கண்டறிய, 480 நோயாளிகளிடம் ஆய்வைத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
“ கட்டாயம் இது ஒரு மருத்துவ சோதனை இல்லை. ஏற்கனவே, மாத்திரியை உட்கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏதேனும் (சராசரி வயது 35 வயது) பக்க விளைவுகள் எற்படுகிறதா என்பது குறித்த ஒரு ஆய்வு மட்டும் தான். 10% பேருக்கு வயிற்று வலி, 6% பேருக்கு குமட்டல், சிலருக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு இருப்பது தெரியவந்துள்ளதாக"கூறினார்.
கங்ககேத்கர் மேலும் கூறுகையில், "மருந்தை உட்கொண்டவர்களில் 22% பேருக்கு ஏற்கனவே நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் சுவாச நோய்கள் இருந்தன. அதனால்தான், முதலில் அதை அவர்கள் எடுத்துக் கொண்டனர். இருப்பினும், இதில் ஒரு கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், சுகாதாரப் பணியாளர்களாக இருந்தபோதிலும், 14% பேர் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு ஈ.சி.ஜி கூட செய்யவில்லை" என்று வருத்தம் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஒரு தடுப்பு மருந்தாக, சுகாதாரப் பணியாளர்களும்,மருத்துவர்களும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையைப் பயன்படுத்தாலம் என்று முன்னதாக ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்தது. மாத்திரையின் அறியப்பட்ட பக்க விளைவுகளில் ஒன்று ஒழுங்கற்ற இதய துடிப்பு.
மருத்துவ நிபுணர் கங்ககேத்கர் கூறுகையில்,"எபோலா நோய்க்கு தடுப்பு மருந்தாக முதலில் உருவாக்கப்பட்ட ரெம்ட்சிவிரின் சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால், இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று (ஏப்ரல். 18) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு (GoM) கூடியது. ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு "ஹாட்ஸ்பாட் அல்லாத மண்டலங்களில்" பொருளாதார நடவடிக்கைகளை பல மட்டங்களாக எவ்வாறு தொடங்குவது? என்பது குறித்து மதிப்பாய்வு செய்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது முடக்கத்தில் இருந்து தளர்வை மிகச் சிறப்பாக அமல்படுத்தும் மாநிலங்களின் சிறந்த நடைமுறைகளை மத்திய அரசு பின்பற்ற முடியும் என்று அமைச்சர்கள் கருதுகின்றனர். "பல துறைகளுக்கு ஏற்கனவே தளர்வு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும்,மே 3ம் தேதிக்குப் பின் மேலும் சில துறைகளுக்கு தளர்வுகள் இருக்கும். எனவே, பொது முடக்க காலத்திற்குப் பிறகு, சில மாநிலங்கள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றலாம்" என்று அமைச்சர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டதாக ஆதராங்கள் தெரிவிக்கின்றன.
மே- 3 பொது முடக்கத்தின் பிந்தைய காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்காக, பெரியளவிலான சமூக ஊடக பிரச்சாரத்தை மத்திய அரசு முன்னெடுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. "கொரோனா வைரஸ் ஆபத்து மே 3ம் தேதியோடு முடிவடையாது. பொது மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும். அனைத்து சமூக விலகல் நெறிமுறைகளும், முகக்கவசம் அணிவதும் மேலும் தொடர வேண்டும்,”என்று அந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.
உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறையின் பணிகளையும் ஆய்வு செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.