மிகைப்படுத்தப்பட்ட வென்டிலேட்டர் சிகிச்சை, தர்மசங்கடத்தில் உற்பத்தியாளர்கள்

வென்டிலேட்டர் நிர்வகிக்கப்படும் கொரோனா  நோயாளிகளிடையே 85% இறப்பு விகிதம் உள்ளது. உண்மையில், மருத்துவர்கள் அவற்றைப் பயன்படுத்த தயங்குகிறார்கள்.

By: Updated: July 8, 2020, 04:07:27 PM

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துள்ளன. கொரோனா ஊரடங்கால் இதர பொருளாதார நடவடிக்கைகள் முடங்கினாலும், ஒவ்வொரு தீவிர சிகிச்சை பிரிவின் இதயமாக இருக்கும் வென்டிலேட்டர் உற்பத்தி வேகமெடுத்தன. இருப்பினும், தற்போது  வென்டிலேட்டர் தொடர்பாக, ஒரு தனித்துவமான சங்கடத்தை இந்திய மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

தீவிர கொரோனா நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க வென்டிலேட்டர்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த வென்டிலேட்டர் கையிருப்பு 47,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கினர்.

ஆனால் தற்போது, முகக்கவசத்துடன் கூடிய செயற்கை சுவாசம் அளிக்கும் மருத்துவமுறையை (non-invasive oxygenation) சுகாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருவதால், உபரியாக உள்ள வென்டிலேட்டரை  ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோவிட்-19 தொடர்பான செயல்பாடுகளைக் கவனித்து வரும் தேசிய அளவிலான பணிக் குழுவின் தலைவர்  (என்.டி.எப்.) நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்)  தலைவர் வி.கே. பால்  கூறுகையில்,” கொரோனா பொது முடக்கநிலை காலம் வென்டிலேட்டர் நிலைமையை மறுபரிசீலனை செய்வதற்கான அவகாசத்தை எங்களுக்கு கொடுத்தது.  தற்போது மிகவும் பாதுகாப்பான இடத்தில்  இருக்கிறோம். ஒரு குறுகிய காலத்திற்குள் அதிக அளவிலான வென்டிலேட்டர்களை உள்நாட்டிலேயே தயாரித்து, ஏற்றுமதி செய்யக் கூடிய திறன்கள் நம்மிடம் உள்ளது என்பதை இந்தியா வெளிப்படுத்தயுள்ளது” என்று தெரிவித்தார்.

பெரிய அளவிலான வென்டிலேட்டர்களின் உற்பத்தி தேவை விரைவில் முடிந்துவிடும் என்பதை மற்ற நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். “மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19  நோயாளிகளுக்கு பெரும்பாலும் அதிக ஓட்டம் கொண்ட ஆக்ஸிஜன் சிகிச்சை முறை  தேவைப்படுவதால் வென்டிலேட்டர்களின் தேவை மிகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று டெல்லி அரசு சுகாதார சேவையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஆர் என் தாஸ் தெரிவித்தார்.

” டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கான கட்டண விவரத்தில், எச்.எஃப்.என்.ஓ (உயர்-ஓட்டம் நாசி ஆக்ஸிஜன் சிகிச்சை) மற்றும் வென்டிலேட்டர்கள் பயன்பாட்டிற்கான விலையை ஒரே அளவில் டெல்லி அரசு நிர்ணயித்தது. எந்தவொரு மருத்துவரும் (அ) மருத்துவமனையும் வென்டிலேட்டர் சிகிச்சை முறைக்கு அளவு கடந்த முன்னுரிமை கொடுப்பது தவிர்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

“மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் வென்டிலேட்டர்  பற்றாக்குறை குறித்து எச்சரிக்கை உணர்வு இருந்தது உண்மை தான்” என்பதை மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் மற்றும் டெல்லி அரசின் கோவிட்-19  கமிட்டியின் உறுப்பினரான டாக்டர் தீபக் டெம்பே-வும் ஒப்புக்கொள்கிறார்.

“ஆனால், புது டெல்லியில் தற்போது ஒவ்வொரு 1,000 பேருக்கு சராசரியாக 3 பேர் என்ற அளவில் தான்  வென்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்படுவதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. மேலும், வென்டிலேட்டர் நிர்வகிக்கப்படும் கொரோனா  நோயாளிகளிடையே 85% இறப்பு விகிதம் உள்ளது. உண்மையில், மருத்துவர்கள் அவற்றைப் பயன்படுத்த தயங்குகிறார்கள்,”என்று தீபக் டெம்பே தெரிவிக்கிறார்.

ஆனால் அதே நேரத்தில், வென்டிலேட்டர் உற்பத்தி திறன் நாட்டில் பல மடங்காக அதிகரித்துள்ளது. எட்டு உற்பத்தியாளர்கள் மாதத்திற்கு சுமார் 300 என்று  உற்பத்தி எண்ணிக்கையில் இருந்து, தற்போது 16 உற்பத்தியாளர்கள் மாதத்திற்கு 30,000 க்கு மேல்  தயாரித்து வருகின்றனர் என்று இந்திய மருத்துவ சாதன தொழில் சங்கத்தின் (AiMeD) மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் நாத் தெரிவித்துள்ளார்.

” வென்டிலேட்டர்  தொடர்பான குறிக்கோள்களை அவ்வப்போது மாற்றுவதால் உற்பத்தியாளர்களை  குழப்பமடைகின்றனர். வாங்குவாதாக ஒப்புக்கொள்ளப்பட்ட சரக்குகளை அரசாங்கம் வாங்கப்போவதில்லை என்ற வெளிவரும் தகவல் கடுமையான நிதி நெருக்கடியை உருவாக்கும்”என்று நாத் கூறுகிறார்.

முன்ன்தாக கடந்த மே மாதத்தில், கருவிகளை வாங்கும் முகமையான, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பொதுத்துறை நிறுவனமான ஹெச் எல் எல் லைஃப் கேர் நிறுவனம் (HLL Lifecare) 60,884 வென்டிலேட்டருக்கு ஆர்டர் கொடுத்தது. இந்த மொத்த ஆர்டர்களில் 59,884 வென்டிலேட்டர்கள்  , உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் என்றும்  ஆயிரம் கருவிகள் இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், இந்த வென்டிலேட்டருக்கான தொழிநுட்ப தரநிலைகள்  பின்னர் மாற்றப்பட்டன.  நோயாளிகள் தன்னிச்சையாக சுவாசிக்க அனுமதிக்கும்  வகையில் invasive , non-invasive modes, synchronised intermittent ventilation ஆகியவற்றை ஆர்டரில் உள்ளடக்கியது.

உதாரணமாக, 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்குவதற்கான  மிகப்பெரிய ஆர்டர் மைசூருவை தளமாகக் கொண்ட Skanray  எனும் நிறுவனத்துக்கு சென்றது. இந்த நிறுவனம் பின்னர்  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்  உடன் தொழில்நுட்ப உறவை அறிவித்தது.

“நாங்கள் அரசாங்கத்திற்கு கூடுதல் அம்சங்களை இலவசமாக வழங்கியுள்ளோம். ஆனால், தற்போது, இந்த டெண்டருக்கான கூடுதல் சப்ளை தேவையில்லை என்று எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையானால், ஏற்றுமதி ஏன் இன்னும் தடுக்கப்பட்டுள்ளது” என்று ஸ்கான்ரே நிர்வாக இயக்குனர் விஸ்வபிரசாத் ஆல்வா தெரிவிக்கிறார்.

இதுபோன்று, பல நிறுவனங்களில் (உதரணமாக, சென்னியைத் தளமாக கொண்டு இயங்கும் பீனிக்ஸ் மெடிக்கல் சிஸ்டம் ) வென்டிலேட்டர்  தொடர்பான ஆர்டர் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படிகிறது.

எடுத்துக் காட்டாக, தமிழகத்தின் அரசு மருத்துவமனை மற்றும் மருததுவ் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளில் சுமார் 3,000க்கும் வென்டிலேட்டர் கருவிகள் இருந்தாலும், அதில் தற்போது    100 கூட பயன்பாட்டில் இல்லை.

“கொரோனா நோய்த் தொற்று பரவியதால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை முடுக்கிவிட்டோம். உள்நாட்டு உற்பத்தி திறன் அடிப்படையில் நாங்கள் திட்டம் தீட்டவில்லை” என்று    தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.உமாநாத் தெரிவித்தார்.

கடந்த வாரம், ஹெச் எல் எல் லைஃப் கேர் நிறுவனம் (HLL Lifecare) சில உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டருக்கான தற்போதைய டெண்டர் இப்போது ‘முடிந்துவிட்டதாகவும்’. மேலும் ஆர்டர்களை வழங்குவது குறித்து தற்போது எந்த முடிவும் இல்லை என்று தெரிவித்தது.

அதே சமயம்,  பொது முடக்கநிலையில் தளர்வுகள்  அறிவித்த பின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வென்டிலேட்டர்ரின்  தேக்கநிலை ஒரு தீர்வாக மாறும் என்பதை உற்பத்தியாளர்களும், சுகாதார துறை அதிகாரிகளும்  மறைமுகமாக ஒப்புக்கொள்கின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:India covid 19 indigenous ventilator production ventilator capacity surge

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X