ஏப்ரல் 13 முதல் மே-10க்கு இடையில், இந்தியாவில் கோவிட் -19 பரிமாற்ற விகிதம் ( R0 -அடிப்படை பரவல் எண்) 1.23 என்ற அளவில் இருந்தது. மே 4க்குப் பிறகு, பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும், இந்த அளவு நிலையானதாக இருப்பதாக சென்னை கணினி அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
பரவல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை மதிப்பிடுவதற்கு, ‘அடிப்படை பரவல் எண்’ ( R0) எனப்படும் அளவைப் உலகளவில் தொற்றுநோயியல் நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர். நோய் தொற்று உள்ள ஒருவர் அதிகபட்சம் எத்தனை நபர்களுக்கு அந்த தொற்றை பரப்பலாம் என்பதையே இது குறிக்கிறது. அதாவது தொற்று நோயானது அதன் வீரியமிக்க காலத்தில் எவ்வளவு வேகமாகப் பரவும் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அலகு R Nought (R0) ஆகும்
பெரும்பாலான மாநிலங்கள் கொரோனா வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும், சில மாநிலங்களில் காணப்படும் அதிகப்படியான பாதிப்பு இந்தியாவின் பரிமாற்ற விகிதத்தை தீர்மானிக்கின்றன.
மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரையிலான ஆரம்ப பொதுமுடக்க நிலையில் இந்தியாவின் கொரோனா பரிமாற்ற விதிக அளவு 1.83 ஆக இருந்தது. தற்போதைய, பரிமாற்ற விகிதம் 1.23 ஆக இருப்பதால், ஒரு நோயாளி சராசரியாக 1.23 பேருக்கு தொற்று ஏற்படுத்துகிறார்.
இந்த தற்போதைய வேகத்தில், மே 17 க்குள் இந்தியாவில் 70,000-80,000 கொரோனா சிகிச்சையில் இருக்கலாம் என்று சின்ஹா கூறினார். நேற்று (செவ்வாய்க் கிழமை), வரை இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 46,008 ஆகும்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி,மேற்கு வங்கம் ஆகியவை கொரோனா பரவலில் அதிவேக வளர்ச்சியைக் காணும் மாநிலங்கள்.
அதிகம் பாதிப்படைந்த முதல் 10 மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாட்டில் அதிகபட்ச பரிமாற்ற விகிதம் (R0- 2.01) காணப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா கிளஸ்டராக உருவெடுத்ததாலும், மாநிலத்தில் கொரோனா பரிசோதனை விரிவாக்கம் செய்ததாலும் (1000 பேருக்கு 3.37 என்ற விகிதத்தில் சோதனை), தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த வாரம் டெல்லியை முந்தியது.
மகாராஷ்டிரா நாந்தேட் பகுதியில் இருந்து திரும்பிய அதிகமான யாத்ரீகர்களுக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டு வருவதால், பஞ்சாப் மாநிலத்தின் R0 மதிப்பு 1.32 உயர்ந்துள்ளது. ஆயிரம் பேருக்கு 1.42 பேருக்கு அங்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
முதல் 10 மாநிலங்களில், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு தில்லி ஆகிய நான்கு பகுதிகளில் மட்டும் இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன.
மேற்கு வங்கத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது (2,063). ஏப்ரல் மாத இறுதியில் அதன் R0 மதிப்பு (1.51), மே தொடக்கத்தில் சற்று குறைந்தது (1.14). மாநிலத்தில் கொரோனா பரிசோதனை விகிதமும் குறைந்த அளவில் காணப்படுகின்றன( ஆயிரத்திற்கு 34 பேர்) மே 10-ல் இருந்து R0 மதிப்பு 1.34-ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தைத் தவிர, மற்ற தென் மாநிலங்கள் கிட்டத்தட்ட நேர்கோட்டு வளர்ச்சியைக் காண்கின்றன. உதாரணமாக, ஆந்திரா பிரேதேசம் அதிக கொரோனா எண்ணிக்கை கொண்ட முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் இருந்தாலும், அதன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கூடுதலாக, அங்கு கொரோன பரிசோதனை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது (ஆயிரத்திற்கு 3.47 பேர் ) . கொரோனா வளர்ச்சியை தட்டையாக்கியதில் கேரளா, அனைவருக்கும் ஒரு முன்னுதரணமாக திகழ்கிறது.
உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் கொண்டிருந்தாலும், வளர்ச்சி விகிதங்கள் அங்கு மிதமாக காணப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் கொரோனா பரிசோதனை விகிதம் மிதமானதாக உள்ளது (ஆயிரத்திற்கு 2.15) உத்தரபிரதேசம் (ஆயிரத்திற்கு .58 பேர் ), மத்திய பிரதேசம் (ஆயிரத்திற்கு .92) ஆகிய மாநிலங்கள் ஒப்பீட்டளவில் குறைவான மக்களை சோதிக்கிறது.
ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வருகையால் பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று சில நாட்களாக அதிகரித்து காணப்படுகின்றன. பீகாரின் சோதனை விகிதம் குறைவாக உள்ளது (ஆயிரத்திற்கு .29 பேர்), ஒடிசா அதன் திறனை சீராக அதிகரித்துள்ளது (ஆயிரத்திற்கு 1.37 பேர் ).
இந்தியாவின் மூன்றாவது பொது முடக்கநிலை வரும் மே 17 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், “பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாமல், நோய் பரவலை தடுப்பது எளிதான ஒன்று அல்ல" என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.