ஜூலை வரை கொரோனா சவால்: பிரதமர்- முதல்வர்கள் விவாதித்தது என்ன?

இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருக்கும் போது ஒரு நாளைக்கு 5 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக பாதிப்பு எண்ணிக்கை இருக்கக் கூடும்.

India News in Tamil : இந்தியாவில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மாநில முதலவ்ரகளுடன் காணொளி காட்சி மூலம் சந்தித்துப் பேசினார். அந்த கூட்டத்தில், மகாராஷ்டிரா, கேரளா, உத்திர பிரதேஷம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் பல தகவல்கள் அடங்கிய காணொளியை விளக்கினார். அந்த காணொளியில், ‘இந்தியாவில், கொரோனா தொற்றின் எண்ணிக்கையானது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தற்போதைய கொரோனா தொற்றின் உச்சம் வரும் மே மாதத்தின் மையப் பகுதியில் மேலும், உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சமாக இருக்கும். அதன் பின்னர், ஜூன் முதல் ஜூலை மாதத்திற்குள் தொற்று எண்ணிக்கை குறையக்கூடும். கொரோனா பாதிப்பில், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் ஆபத்தில் உள்ளன. இந்த மாநிலங்களில் மிகவும் தீவிரமான சூழ்நிலையை சமாளிக்க மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை.

கொரோனா பரவல் சங்கிலிகளை உடைக்க மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் அந்த காணொளியில் வி.கே.பால் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற தாராளவாத தடுப்பூசி கொள்கை, ஆக்ஸிஜனின் உற்பத்தியை பெருக்கி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் ரெம்டிசிவர் மருந்து கிடைப்பதை அதிகப்படுத்துதல் போன்ற மத்திய அரசின் முயற்சிகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

ஆய்வுக் கூட்டத்தில் வி.கே.பால் தொகுத்து வழங்கிய விளக்கக்காட்சியில், ஏப்ரல் 30 க்குள் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள மாநிலங்களில் முக்கிய மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை அளவை விவரித்துள்ளார். குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 10 மாநிலங்களின் சுகாதார உள்கட்டமைப்பில் வெளிப்படையான நிலையை அவர் விளக்கினார்.

குறிப்பிட்ட 10 மாநிலங்களில், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகியவை இந்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, 1,19,604 தொற்று எண்ணிக்கைகளுடன் உ.பி. முதலிடத்தில் உள்ளது. ஆனால், ஏப்ரல் 15 அன்று 20,439 தொற்று எண்ணிக்கைகளே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியில், தற்போதைய தொற்று எண்ணிக்கை 67,134 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 25 அன்று 17,282 தொற்று எண்ணிக்கை மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், தற்போது, நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், தொற்றை சமாளிக்க எந்த மாநிலத்திற்கும் போதுமான உள்கட்டமைப்பு இல்லை. குறிப்பாக, பலருக்கு சிகிச்சை வசதிகள் கிடைக்கப் பெறாததால் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தனது விளக்க காணொலியில் வி.கே.பால் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அதன் உச்சம், வரும் மே மாதத்தின் மையப்பகுதியில் இருக்கும் என அவரது விளக்கக் காட்சியில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருக்கும் போது ஒரு நாளைக்கு 5 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக பாதிப்பு எண்ணிக்கை இருக்கக் கூடும். மேலும், வரவிருக்கும் நாள்களில், தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் மேலும் உயரும். கொரோனா பராவலின் இரண்டாம் அலை கட்டுக்குள் வர, நேரம் எடுக்கும். குறிப்பாக, ஜூன் முதல் ஜூலை வரை நீடிக்கலாம் என, மாநில முதல்வர்களுடன் பகிரப்பட்ட விளக்கக் காட்சியின் மூலம் தெரிய வருகிறது.

இந்திய சுகாதார அமைப்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும், குறிப்பிட்ட சில மருந்துப் பொருள்களாலும் திண்றுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் இறுதியில், நாட்டில் 81,094 ஐசியு படுக்கை வசதிகள் இருந்தன. தற்போதைய சூழலில் அவை 1.5 லட்சம் வரை இருந்தால் மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் காணொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்படுத்துதலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஒரு நாள் தாமதமானாலும் நிலைமை மோசமடையும் என வி.கே.பாலின் விளக்கக் காணொலி எச்சரிக்கிறது. தற்போது, இந்தியா உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளது என காணொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, ஒரே நாளில் 3.15 லட்சட்துக்கும் அதிகமாக தொற்று எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ஒரே நாடு இந்தியா என நிலைமை மாறிவருவதாக குறிப்பிட்டுள்ளது.

கூட்டத்திற்குப் பின், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அதிகாரி ஒருவர், ‘மருத்துவ உள்கட்டமைப்புகளில் பற்றாக்குறை இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டுமே. இந்த சூழலில் தற்போதைய தேவை சுகாதார உள்கட்டமைப்பு அல்ல, ஆக்சிஜன் மட்டுமே. அது முறையாக கிடைக்கப் பெற்றால் எங்களால் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்’, என கூறியுள்ளார்.

தடுப்பூசி திட்டம் மற்றும் திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் விநியோகத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றியும் விளக்கக்காட்சி விவரிக்கிறது. தற்போதைய சூழலில், ஒரு நாளைக்கான ஆக்சிஜன் கிடைக்கும் அளவானது 3,300 மெட்ரிக் டன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, 16,732 மெட்ரிக் டன் திறன் கொண்ட 1,172 ஆக்ஸிஜன் டேங்கர்கள் இந்தியாவில் உள்ளன. இந்த அளவை மேலும் அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக பாலின் விளக்கக் காட்சி கூறுகிறது. மேலும், ஆக்ஸிஜன் தேவை குறித்து வழிகாட்டுதல்கள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை மட்டத்தில் வழிகாட்டுதல்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

கொரோனா சிகிச்சையில், முக்கிய மருந்துப் பொருளான ரெம்டிசிவிர் மருந்து, அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, மே மாதத்தில் 74.10 லட்சம் குப்பிகளை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில், நாடு முழுவதும் சுமார் 49.07 லட்சம் ரெம்டிசிவிர் மருந்து குப்பிகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India covid second wave peak mid may pm cm state meets

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com