அம்ரிதா நாயக் தத்தா
ரஷ்யாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களுக்கு எதிராக சுமார் ரூ.28,000 கோடி ரூபிள் மதிப்பிலான, நிலுவைத் தொகையை செலுத்த இந்தியா குறைந்தது மூன்று வழிகளை ஆராய்ந்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனுடனான அதன் போர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து ரஷ்யா கடுமையான பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதுவரை, இந்தியாவால் இந்தப் பணம் செலுத்த முடியவில்லை.
இந்தியாவின் பெரும்பாலான இராணுவ தளவாடங்கள், ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவை என்பதால், பணம் செலுத்துவது மேலும் தாமதமானால், முக்கியமான உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களின் விநியோக தேவையை பூர்த்தி செய்யும் ரஷ்யாவின் திறன் குறித்து, அரசாங்கத்தில் கவலைகள் உள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. துபாயை தளமாகக் கொண்ட வர்த்தகர்கள் மூலம் வாங்கப்படும் ரஷ்ய எண்ணெய்க்கு அமெரிக்க டாலருக்குப் பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம்களில், இந்திய சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் பணம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை சனிக்கிழமை, செய்தி வெளியிட்டது.
ஒரு உயர் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், இந்தியா தற்போது, ஆயுதங்களுக்கான ரஷ்யாவின் நிலுவைத் தொகையை செலுத்த மூன்று விருப்பங்களை பரிசீலித்து வருகிறது, அதில் ஒன்று சீன யுவான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாமில் ரூபிள் நிலுவைத் தொகையை செலுத்த ஆராய்ந்து வருகிறது.
இந்த விவகாரம் ரஷ்யாவுடன் கடந்த ஆண்டு பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சகங்களின் அதிகாரிகளுக்கு இடையில் விவாதிக்கப்பட்டது, மேலும் இந்த வழிமுறைகள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் விவாதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
மூன்றாவது நாட்டின் வெளிநாட்டு நாணயம் மூலம் பணம் செலுத்துவது குறித்து ஆராயப்பட்டாலும், பெரும்பாலான பாதுகாப்பு ஒப்பந்தங்களின் சென்சிட்டிவ் தன்மை காரணமாக இந்தியா அச்சங்களைக் கொண்டுள்ளது. "நாங்கள் திர்ஹாம் விருப்பத்தை ஆராய்ந்து வருகிறோம், ஆனால் யுவான் விருப்பத்தில் குறைவான வசதியே உள்ளது" என்று ஒரு அதிகாரி கூறினார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடன் கருவியான இறையாண்மைப் பத்திரங்களின் (sovereign bonds) கலப்பின வடிவத்தின் மூலம் ரூபிள் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதில் வட்டி உட்பட நிலையான தொகையை பின்னர் செலுத்த அரசாங்கம் உறுதியளிக்கும்.
ரஷ்யாவிற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இந்தியாவில் ஒரு தனி கணக்கிற்கு மாற்ற முடியுமா மற்றும் அத்தகைய வைப்புகளுக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கப்படுமா என்பது விவாதிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
இறையாண்மைப் பத்திரங்கள் பொதுவாக நிலுவைத் தொகையைச் செலுத்தப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், இது ஹைப்ரிட் என்று அழைக்கப்படுகிறது என்று ஒரு அதிகாரி விளக்கினார். இதில் விவாதிக்கப்படும் மூன்றாவது விருப்பம், அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் ரஷ்யாவிற்கு சில பங்குகளை வழங்குவதாகும், இது எதிர்காலத்தில் கலைக்கப்படலாம் – இந்த பரிந்துரை ரஷ்ய தரப்பிலிருந்து வந்ததாக புரிந்து கொள்ளப்பட்டது.
இரண்டாவது அரசாங்க அதிகாரி, இந்த விருப்பம் இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சிகளில் கூட பயன்படுத்தப்படலாம் என்று கூறினார், அங்கு இந்தியா, தற்காலிகமாக, தேவைப்படும் போது ரஷ்யாவின் தரப்பில் இருந்து தேவையான முதலீடுகளை செய்யலாம்.
ரஷ்யாவின் பணம் செலுத்துவதில் இந்தியா சிக்கலை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. அமெரிக்காவின் எதிரிகளை தடைகள் மூலம் எதிர்க்கும் சட்டத்தை (CAATSA) அமெரிக்கா நிறைவேற்றிய ஒரு வருடத்திற்குப் பிறகு - 2018 ஆம் ஆண்டில், ரஷ்யாவுடன் S-400 ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டபோது- பாதுகாப்பு தொடர்பான பொருட்களுக்கான ரூபிள் நிலுவைத் தொகை செலுத்துவதில் சவால்கள் இருந்தன.
எவ்வாறாயினும், VTB மற்றும் Sberbank ஆகிய இரண்டு ரஷ்ய வங்கிகளின் இந்திய கிளைகள் மூலம், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரை வழங்குவதன் மூலம், பாதுகாப்பு தொடர்பான பொருட்களுக்கான ரஷ்ய கொடுப்பனவுகளை இந்தியா சமாளித்தது.
இருப்பினும், ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்த பிறகு இவையும் பொருளாதாரத் தடைகளின் கீழ் வைக்கப்பட்டன.
உக்ரைனுடனான போரை அடுத்து அந்நாட்டின் மீது பல தடைகள் விதிக்கப்பட்ட பின்னர், இந்திய வங்கிகள் ரஷ்ய கொடுப்பனவுகளைச் செயல்படுத்த திறக்கவில்லை.
28,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபிள் நிலுவைத் தொகையில், இந்திய விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படை, அத்துடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் பல்வேறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் அடங்கும்.
2021-22 நிதியாண்டின் இறுதிக்குள் ரஷ்யாவுக்கு இந்தியா ரூ.11,500 கோடி செலுத்த வேண்டியிருந்தது.
ரஷ்யாவுடனான சில ஒப்பந்தங்களில், இராணுவத்தின் சரக்குகளில் பல ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களுக்கான உதிரிபாகங்கள் தவிர- S-400 வான்வழி ஏவுகணை; ரஷ்யாவில் கட்டப்படும் இரண்டு துஷில் வகை கப்பல்கள்; ஸ்மெர்ச் மல்டிபிள் ராக்கெட் ஏவுதள அமைப்புகளின் குறிப்பிடப்படாத எண்ணிக்கை; ராக்கெட் எறிகணைகள் மற்றும் ரஷ்ய தயாரிப்பான X-31 ஏவுகணைகள், மற்ற ஏவுகணைகள் அடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.