பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இந்தியாவின் பலத்தை பலவீனமாக மாற்றியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
“வரலாற்றில் முதல் முறையாக இந்தியா மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இந்தியாவின் பலத்தை பலவீனமாக மாற்றியுள்ளது,”என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையை மேற்கோளிட்டார்.
வரலாற்றில் முதல் முறையாக, 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
முன்னதாக, ஆகஸ்ட் 31ம் தேதியன்று, மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ( ஏப்ரல்-ஜூன்) உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 23.9 சதவீத பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், இந்தியன் ரிசர்வ் வங்கி ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 8.6 சதவீதம் பின்னடைவு ஏற்பட்டுக்ள்ளதாக கணித்துள்ளது.
எவ்வாறாயினும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில்,பொருளாதார வளர்ச்சி ஆறு மாத கால பின்னடைவில் இருந்து மீண்டு வரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளாலும், பண்டிகைக் கால விற்பனையாலும், சிறு, குறு பொருளாதார நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பொருளாதார வளர்ச்சி மீண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இரண்டாவது காலாண்டிற்கான என்எஸ்ஓ மதிப்பீடுகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் போது, பொருளாதார வளர்ச்சி குறித்த அறிகுறிகள் சுட்டிக்காட்டப்படும் என்று ரிசர்வ் வங்கி தனது ‘பொருளாதார நிலை’ அறிக்கையில் தெரிவித்தது.