/indian-express-tamil/media/media_files/2025/02/03/hIxleIFjJJm2TOmqhM2V.jpg)
இந்தோனேஷியாவில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோயிலின் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி, 'முருகனுக்கு அரோகரா' என தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India, Indonesia share motto of ‘unity in diversity’: PM Modi inaugurates Murugan temple
இது தொடர்பான வீடியோ மற்றும் வாழ்த்து செய்தியை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "இந்தோனேஷியா நாட்டின் தலைநகரமான ஜகார்தா நகரத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள, முருகப் பெருமானின் ஶ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழாவுக்கு, காணொளி வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், தனது உரையைத் தொடங்கும்போது, “முருகனுக்கு அரோகரா” என்று தமிழில் தொடங்கியது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்தோனேஷிய ஜனாதிபதி உள்ளிட்ட அந்த நாட்டின் தலைவர்களுக்கு அனுப்பிய காணொளியில், இந்தியாவிற்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையிலான உறவு, ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரம், பாரம்பரியம், நம்பிக்கைகள் மற்றும் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை எடுத்துக் கூறிய நமது பிரதமர் அவர்கள், முருகப்பெருமானைப் போற்றிப் பாட, திருப்புகழ் பாடல்களையும், அனைத்து மக்களும் பாதுகாப்புடன் இருக்க, கந்த சஷ்டி கவசத்தையும் தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும் என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.
தமிழக மக்களின் ஆன்மிக நம்பிக்கையை, உலக அரங்கில் எதிரொலித்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, அனைத்து முருக பக்தர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தோனேஷியா நாட்டின் தலைநகரமான ஜகார்தா நகரத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள, முருகப் பெருமானின் ஶ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழாவுக்கு, காணொளி வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், தனது உரையைத்… pic.twitter.com/CaRvdUG5Ac
— K.Annamalai (@annamalai_k) February 2, 2025
பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், "இந்தியாவிற்கும், இந்தோனேஷியாவிற்கும் இடையிலான உறவு, புவி-அரசியல் மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் வேரூன்றியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இந்தோனேசியாவில் உள்ள பிரம்பனன் கோயிலுக்குச் சென்றால், அவர்கள் காசி மற்றும் கேதார்நாத்தில் உள்ள அதே ஆன்மிக உணர்வை அனுபவிக்கிறார்கள்" என தெரிவித்திருந்தார்.
இந்தோனேஷிய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 4,000 சதுர மீட்டர் நிலத்தில் கட்டப்பட்ட கோயில், நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. முருகன் மற்றும் பிற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகள் தவிர, இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையிலான வரலாற்று தொடர்பைக் காண்பிக்கும் அருங்காட்சியகமும் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.