இஸ்ரேல் காசா பகுதியில் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றடதையடுத்து, காசாவின் நிலைமை குறித்து இந்தியா புதன்கிழமை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இஸ்ரேல் காசா பகுதியில் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்ற ஒரு நாளுக்குப் பிறகு, காசாவின் நிலைமை குறித்து இந்தியா புதன்கிழமை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான அவசரத் தேவையையும், பிராந்தியத்திற்கு மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதையும் புதுடெல்லி வலியுறுத்தியது.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் காசா மக்களுக்கு நீடித்த உதவிக்கான தனது அழைப்பையும் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியது.
“காசாவின் நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்” என்று வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.
நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பாதையாக ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் நிலைநிறுத்தி வருகிறது. மேலும், இந்தியா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களை புதுடெல்லி கண்டித்துள்ளது. மேலும், காசாவில் பொதுமக்களை ஆதரிக்க மனிதாபிமான உதவி தேவை என்று பலமுறை அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார். தாக்குதல்கள் "ஆரம்பம் மட்டுமே" என்றும், ஹமாஸுடனான எதிர்கால பேச்சுவார்த்தைகள் "துப்பாக்கிச் சூட்டுக்கு கீழ் மட்டுமே நடைபெறும்" என்றும் கூறினார்.
“கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் எங்கள் கையின் வலிமையை ஏற்கனவே உணர்ந்துள்ளது. மேலும், நான் உங்களுக்கும் - அவர்களுக்கும் - இது ஆரம்பம் மட்டுமே என்று உறுதியளிக்க விரும்புகிறேன்” என்று இஸ்ரேல் பிரதமர் ஒரு வீடியோ அறிக்கையில் கூறினார்.
மூன்று கட்ட போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தை 30 முதல் 60 நாட்கள் நீட்டிப்பதற்கான திட்டங்களை ஹமாஸ் நிராகரித்ததை அடுத்து, காசாவில் தாக்குதல்களை மீண்டும் தொடங்க முடிவு செய்ததாக நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் கட்டம் ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது, ஆனால் இந்த மாத தொடக்கத்தில் காலாவதியானது.
ஜனவரியில் ஏற்றுகொள்ளப்பட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வருவது போல் தோன்றிய நிலையில், இந்த வான்வழித் தாக்குதல்கள் வந்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் ஹமாஸ் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேரையும் சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக விடுவித்தது. இருப்பினும், மீதமுள்ள 59 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. ஹமாஸ் காசாவிலிருந்து முழுமையாக இஸ்ரேலியர் வெளியேற வேண்டும் என்று கோரியுள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேல் அந்த நிபந்தனையை ஏற்காமல் போர் நிறுத்தத்தை நீட்டிக்கக் கோரியுள்ளது.