இந்தியாவின் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.போப்டேவின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியோடு நிறைவுறுவதை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்.வி.ரமணா வை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரைத்ததன் அடிப்படையில், இந்தியாவின் 48-வது தலைமை நீதிபதியாக வருகின்ற 24-ம் தேதி என்.வி.ரமணா பதவியேற்கிறார். என்.வி.ரமணா 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 26 வரை பதவியில் இருப்பார் என, குடியரசுத் தலைவரின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ரமணா கடந்த 1983-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். பல்வேறு அரசு அமைப்புகளுக்கான ஆலோசகராக பணியாற்றியுள்ளதோடு, மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். ஆந்திராவின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட என்.வி.ரமணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதி மன்றம் அமைக்கப்படும் என்ற வழக்கு, ஜம்மு காஷ்மீரில் இணைய கட்டுபாடுகளை நீக்குதல் உள்பட பல குறிப்பிடத்தக்க வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார்.
எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளின் சமீபத்திய நிலையை கண்காணிக்க உச்சநீதிமன்றத்தில் தனி பெஞ்ச் அமைக்க கோரிக்கை விடுத்தவர், என்.வி.ரமணா. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வழக்கில், தங்களை விடுதலை செய்யக் கூறி மணு தாக்கல் செய்த குற்றவாளிகளின் மனுவை தள்ளுபடி செய்தது என்.வி.ரமணா தலைமையிலான உயர்நீதி மன்ற பெஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil ) கிளிக் செய்யவும்.