India news in Tamil: மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, மற்றும் உத்தர பிரேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் தலைநகர் டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் நடத்தி வந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசின் பேச்சு வார்த்தைக் குழு பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் அவை ஏதும் விவசாயிகளுக்கு பயனளிக்கவில்லை. எனவே போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்டுச் செல்ல குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி மூலம் சென்று டெல்லியில் உள்ள செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த டிராக்டர் பேரணி போராட்த்தின் போது, பாதுகாப்பிற்கு இருந்த காவலர்கள் பேரணியாக வந்த விவசாயிகள் மீது தடியடி நடத்தி கலைக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த தடுப்பு வேலியில் பேரணியாக வந்த டிராக்டர் மோதி கவிழ்ந்தது. ட்ராக்ட்டரை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பலருக்கும், கலைக்க முயற்சித்த காவலர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் சில விவசாய சங்கள் தாங்கள் ஏற்கனவே அமைதி வழியில் போராடிய இடத்திற்குச் சென்றனர்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியின் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வந்த விவசாய சங்கங்கள் அதே இடத்தில் போராட்டத்தை தொரடர்ந்துள்ளனர். அந்த பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், எந்த பகுதிக்கும் செல்லாதபடி இரும்புக் கம்பியிலான முள் வேலிகளும், தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு நகரங்களை இணைக்கும் சாலைகளான டெல்லி மற்றும் ஹரியானா – ஜி.டி. கர்னால் போன்ற சாலைகளும் தடுப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு போராடி வரும் விவசாயிகளோடு சேர்ந்து, அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து சிங்கு பகுதியில் விவசாயம் நிலம் வைத்துள்ள அந்த பகுதியைச் சேர்ந்தவரான ராஜ் சிங்கிடம் கேட்டபோது,”விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் போராட்ட பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் எங்கள் கிராமத்திலிருந்து வெளியே செல்ல பயன்படுத்தப்படும் சாலைகளை தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். முன்பெல்லாம் நெடுஞ்சாலைக்குச் செல்ல ஒரு நிமிடம் போதும், ஆனால் இப்போது வயல்வெளிகளை சுற்றிக்கொண்டு குறுகிய பாதை வழியாக செல்வதால் நெடுஞ்சசாலையை அடைய அரை மணி நேரம் ஆகின்றது. இதனால் போராடும் விவசாயிகளுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. எங்களது பிரச்சனையே இந்த தடுப்பு வேலிகள் தான்” என்று அவர் கூறியுள்ளார்.
“யாருக்கும் பயனில்லாத இந்த தடுப்புகள், பொதுமக்களை விரக்தியடையச் செய்வதற்கும் விவசாயிகளுக்கு எதிராக எங்களைத் தூண்டுவதற்கும் இதைச் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் ஏன் அவர்கள் மீது கோபப்பட வேண்டும்? அவர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையிலே காட்டி வருகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், இந்த இடத்தை விட்டு வெளியேறுவார்கள்” என்று அந்த பகுதியில் வணிகம் செய்து வரும் ராதே ஷியாம் கூறியுள்ளார்.
அதே பகுதியைச்சேர்ந்த 200 மேற்பட்டவர்கள் கூட்டமாக சேர்ந்து போராட்டம் நடக்கும் இடத்தை நோக்கி கற்களைக் கொண்டு கடந்த வாரத்தில் வீசியுள்ளனர். அந்த நபர்கள் பாஜக-வைச் சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
இதையடுத்து கந்த புதன் கிழமை சன்யுக்ட் கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில், “சிங்கு எல்லையில் ஊடகவியலாளர்கள் நுழைவதைத் தடுக்கும் போலீசாரின் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். அரசாங்கம் ஏற்கனவே இணையத்தை முடக்கி விட்டது. இப்போது ஊடகவியலாளர்கள் போராட்ட களத்திற்குள் நுழைவதையும், அதைத் தொடர்ந்து கவரேஜ் செய்வதையும் தடுத்து வருகிறது. இந்த போராட்டம் குறித்து நாடு முழுவதும் உள்ள மக்கள் தெரிந்து கொள்வதை தடுப்பதோடு, தகவல் தொடர்புகளையும் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இவையனைத்தையும் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil