மத்தியப் பிரதேசத்தில் உள்ள டாக்டர் ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை அமெரிக்காவின் மாண்ட்க்ளேர் மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இணைய வழி கருத்தரங்கம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. கலாச்சாரம் மற்றும் மொழியியல் பற்றிய இந்த கருத்தரங்கில் முன்னாள் சிஎஸ்ஐஆர் தலைமை விஞ்ஞானி கவுர் ராசா, டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அபூர்வானந்த், ஐஐடி ஹைதராபாத் பேராசிரியர் ஹர்ஜிந்தர் சிங் மற்றும் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் மாநில பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் டாக்டர் அசீம் ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்க இருந்தனர்.
இந்த கருத்தரங்கில் இடம் பெற்றுள்ள பேச்சாளர்கள் குறித்து ஜூலை 22ம் தேதி முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்த அகில் பாரதிய மாணவர் பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு இது தொடர்பாக சாகர் மாவட்ட காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்திருந்தது. எனவே கருத்தரங்கு தொடங்க 2 மணி நேரம் இருந்தபோது காவல்துறையின் குறுக்கீட்டால் இந்த இணைய வழி கருத்தரங்கம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து எபிவிபி அமைப்பின் சாகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் ரிச்சாரியா சாகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதுல் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், “வெபினாரில் கலந்து கொள்ள உள்ள கவுர் ராசா மற்றும் பேராசிரியர் அபூர்வாநாத் ஆகிய இரு பேச்சாளர்கள் தேச விரோத மனநிலை கொண்டவர்கள் மற்றும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி கலவரத்தில் அபூர்வாநாத் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அதற்காக விசாரிக்கப்பட்டது. பிரபல பயங்கரவாதி அப்சல் குருவுக்காக கவுர் ராசா 'அஜ்மல் பிரேம்' என்ற கவிதை எழுதியுள்ளார்." என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சாகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதுல் சிங், பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில் "வெபினரில் (இணைய வழி கருத்தரங்கம்) கலந்து கொண்ட பேச்சாளர்களின் கடந்த கால வரலாறு, தேச விரோத மனநிலை மற்றும் சாதி தொடர்பான அறிக்கைகள் தனக்கு கிடைத்துள்ளதாகவும், கருத்தரங்கில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் மற்றும் காட்சிப்படுத்தப்பட வேண்டிய யோசனைகள் குறித்து முன்கூட்டியே தங்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த கடித்ததில், "பல்கலைக்கழக நிர்வாகம் மானுடவியல் துறை மூலமாக மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அனுமதி நடத்த வேண்டி கடிதம் எழுத வேண்டும். மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்றால் ஆன்லைன் வெபினாரை ஒத்திவைக்க வேண்டும். பேராசிரியர் கவுதம் மற்றும் அவரது குழுவினர் பல்கலைக்கழக லோகோ, பெயர் அல்லது எந்தவொரு பல்கலைக்கழக மேடையையும் நிகழ்விற்காக பயன்படுத்த கூடாது." என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மானுடவியல் துறை மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினாலும், பதில் கிடைக்காததால் பேராசிரியர் கவுதம் மற்றும் அவரது குழுவினர் வெப்பினாரை 2 மணி நேரத்திற்கு முன்பாக நிறுத்தும் நிலையில் ஏற்ப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜே டி அகியை தொடர்பு கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இது குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதுல் சிங்கை நாம் தொடர்பு கொண்டபோது, "பல்கலைக்கழகம் வெபினாரைப் பதிவு செய்ய மட்டுமே கேட்கப்பட்டது. அது ஒழுங்கமைக்கப்படுவதற்கு முன்பு பல்கலைக்கழக துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிடையேயும் பரஸ்பர ஒப்புதல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதம் ஒரு குறிப்பிட்ட அமைப்பிலிருந்து வந்திருந்தாலும், எங்களிடம் உளவுத்துறை அறிக்கைகள் இருந்தன. இது ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமூகத்தை குறிவைப்பதாக கருதப்பட்டது, இதை மனதில் கொண்டு, வெபினார் ஒரு பொது மேடை என்பதால் அமைப்பாளர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடிதம் எழுதப்பட்டது, "என்று அவர் கூறினார்.
இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அபூர்வானந்த், “காவல்துறை, ஏபிவிபி அமைப்பை அமைதிபடுத்துவதற்கு பதிலாக, கருத்தரங்க அமைப்பாளர்களுக்கு எதிராகத் திரும்பியது மிகவும் வருத்தமளிக்கிறது. ஏபிவிபி அமைப்பு அளவுக்கு மீறிய செல்வாக்கைப் பயன்படுத்துகிறது, பல்கலைக்கழகம் அழுத்தத்தை எதிர்க்க முயன்றாலும், துணைவேந்தர் இது எங்களின் என்று காவல்துறைக்கு பதில் எழுதியிருக்கலாம்.
15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் காலேலியோ மற்றும் பர்னோ போன்றவர்கள் தேவாலயத்தை புண்படுத்தியதால் கொல்லப்பட்டபோது ஐரோப்பா எதிர்கொண்டதை தற்போது இந்தியா எதிர்கொள்கிறது. அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக அரசு இயந்திரங்கள் எவ்வாறு செயல்பட முடியும்? சம்பவத்தால் காயப்பட்ட என் உணர்வுகளைப் பற்றி என் நிலை என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.