Saman Husain
"சர்வாதிகாரம்" மற்றும் "ஜனநாயகத்தை நசுக்குவதற்கு" எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமை இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஒன்று கூடி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து, மார்ச் 31 அன்று ராம்லீலா மைதானத்தில் கூட்டு எதிர்ப்புப் பேரணியை நடத்துவதாக அறிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: INDIA partners announce joint rally at Delhi’s Ramlila Maidan on March 31
கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான கோபால் ராய் பேசுகையில், “நாட்டின் பிரதமர் சர்வாதிகாரி போல் செயல்பட்டு ஜனநாயகத்தை நசுக்கும் விதத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று கைது செய்துள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை நேசிக்கும் மக்கள் கோபத்தில் உள்ளனர். இது கெஜ்ரிவாலைப் பற்றியது மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஏஜென்சிகளின் உதவியுடன் ஒன்றன் பின் ஒன்றாக குறிவைக்கப்படுகின்றன,” என்று கூறினார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஜார்கண்டிலும் முதல்வர் (ஹேமந்த் சோரன்) எப்படி கைது செய்யப்பட்டார் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம், நாடு முழுவதும் இதை பார்க்கிறோம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியாக இருந்தாலும் சரி, பீகாரைச் சேர்ந்த தேஜஸ்வியாக இருந்தாலும் சரி, அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியா கூட்டணியின் தலைவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவர் மீதும் மோசடி வழக்குகள் போடப்பட்டு, அவர்களை வாயடைக்கச் செய்யும் நோக்கத்தில் உள்ளனர், என்றும் கோபால் ராய் கூறினார்.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து "எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்தப்பட்ட விதம்" குறித்து கோபால் ராய் சீற்றத்தை வெளிப்படுத்தினார். “ஒருபுறம் முதல்வரைக் கைது செய்துவிட்டு, மறுபுறம் மொத்தத் தலைநகரையும் சிறைச்சாலையாக மாற்றியிருக்கிறார்கள். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரத்தில் வித்யாயாக்கள் (எம்.எல்.ஏ.க்கள்) கெஜ்ரிவால் இல்லத்திற்கு வந்தபோது, அவர்களும் கைது செய்யப்பட்டனர். மறுநாள் காலையில் எம்.எல்.ஏ.,க்கள் அவருடைய குடும்பத்தாரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றனர்; பின்னர், (அதிகாரிகள்) (சட்டமன்ற உறுப்பினர்களின்) நுழைவைத் தடை செய்ததால் அவரது குடும்பத்தினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தியபோது, ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் தடுப்புகளை ஏற்படுத்தினர். MCC (தேர்தல் நடத்தை விதிகள்) தற்போது நடைமுறையில் உள்ளது; அத்தகைய நேரத்தில், ஒரு கட்சியின் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்படுகிறது, மேலும் நான் பிரதேச ஆதிக்ஷ் (மாநிலத் தலைவர்) என்ற போதிலும் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை,” என்று கோபால் ராய் கூறினார்.
“நேற்று ஷாஹிதி திவாஸ், பகத்சிங்குக்கு மரியாதை செலுத்த நாங்கள் போராட வேண்டியிருந்தது. நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டோம்... தியாகிகளுக்கு மரியாதை அளிப்பதும் ஒரு குற்றம் போல” என்று கோபால் ராய் கூறினார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க பயனடைவதாகவும் கோபால் ராய் குற்றம் சாட்டினார். “எதிர்க்கட்சி தலைவர்களை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்வதாக பா.ஜ.க திரும்பத் திரும்ப சொல்கிறது, ஆனால் பா.ஜ.க.,வே தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை தனது கஜானாவை நிரப்பியுள்ளது, ஆனால் சி.பி.ஐ.,யோ, உச்ச நீதிமன்றமோ அல்லது அமலாக்கத்துறையோ கேள்வி எழுப்பவில்லை. இதற்கிடையில், எங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, இதனால் கட்சியால் இன்று பிரச்சாரம் செய்ய முடியவில்லை,” என்று கோபால் ராய் கூறினார்.
நாடு ஆபத்தில் உள்ளதால் இன்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைகின்றன என்று கோபால் ராய் கூறினார். “ஒருபுறம் இவ்வளவு பழம்பெரும் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது, மறுபுறம் பா.ஜ.க.,வின் கருவூலத்தை நிரப்பாத ஒவ்வொரு தொழிலதிபரும் நெருக்கடியில் உள்ளனர்” என்று கோபால் ராய் கூறினார்.
இதற்கிடையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், “எங்கள் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார்… இதுபோன்ற சூழ்நிலையில் ஜனநாயகத்திற்கு சவாலாக இருக்கும் போது காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காமல் உட்கார முடியாது” என்று கூறினார்.
“இவ்வளவு இளம் வயதில் பகத்சிங் ஏன் தனது உயிரைத் தியாகம் செய்தார், மகாத்மா காந்தி இந்த நாட்டிற்காக ஏன் போராடினார்? அவர்கள் நமக்காகப் போராடினார்கள், நாம் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆனால் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையை காந்தியும் பகத்சிங்கும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்... எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சமதளத்தைக் கூட கொடுக்க அவர்கள் விரும்பவில்லை. தேர்தலுக்கு முன்பே நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான கட்சியின் வங்கிக் கணக்கை சீல் வைத்துவிட்டு இதை ஜனநாயகம் என்கிறீர்களா? என்று அரவிந்த் சிங் லவ்லி கேள்வி எழுப்பினார்.
மார்ச் 31 பேரணியில், “நாங்கள் ஒரு பெரிய பேரணியை நடத்துவோம்... இது வெறும் அரசியல் பேரணியாக மட்டும் இருக்காது, நாட்டின் ஜனநாயகத்தின் மீது வரும் அச்சுறுத்தலை முழு தேசமும் கேள்வி கேட்கும் பேரணியாக இருக்கும்... நான் வேண்டுகோள் விடுக்க வேண்டாம். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அனுதாபிகள், மேலும் RWAக்கள் (குடியிருப்பு நலச் சங்கங்கள்) மற்றும் டெல்லி மக்களும் அதிக எண்ணிக்கையில் வருவார்கள்” என்று அரவிந்த் சிங் லவ்லி கூறினார்.
சி.பி.ஐ (எம்) கட்சியைச் சேர்ந்த ராஜீவ் குன்வார், “கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட தருணத்தில் நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். எதிர்ப்பு என்பது ஒரு முதலமைச்சர் கைது செய்யப்படுவதை மட்டும் நோக்காமல், சர்வாதிகார ஆட்சிக்கு எதிரானது. நாங்கள் 31 ஆம் தேதி அதிக எண்ணிக்கையில் வருவோம்,” என்று கூறினார்.
காங்கிரசை சேர்ந்த சுபாஷ் சோப்ரா கூறுகையில், “டெல்லியில் உருவாகி வரும் சூழ்நிலை எப்படி கட்டுப்படுத்தப்படும்? இந்த பேரணி பணவீக்கத்திற்கு எதிரானது, இந்த பேரணி அடக்குமுறைக்கு எதிரானது என்று மக்களுக்கு நான் கூற விரும்புகிறேன்,” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“