இன்று (ஆகஸ்ட் 23) உக்ரைன் அதிபரை சந்திப்பதற்காக கீவ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமைதிக்கான எந்த முயற்சியிலும் இந்தியா தீவிர பங்கு வகிக்கத் தயாராக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் உறுதியளித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘India ready to play active role… was never an indifferent bystander’: PM Modi to Zelenskyy on Russia-Ukraine war
“அமைதிக்கான எந்தவொரு முயற்சியிலும் இந்தியா தீவிரமான பங்கை வகிக்கத் தயாராக உள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இதில் தனிப்பட்ட முறையில் என்னால் ஏதாவது செய்ய முடிந்தால், ஒரு நண்பராக நான் நிச்சயம் செய்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்,” என்று மோடி கூறினார்.
செய்தியாளர்களிடம் கூட்டறிக்கையில், பிரதமர் மோடி, அமைதி செய்தியுடன் உக்ரைன் வந்திருப்பதாகவும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆரம்ப வாய்ப்பு என்றும் கூறினார். "தீர்வுக்கான பாதையை உரையாடல் மற்றும் இராஜதந்திரம் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். நாம் நேரத்தை வீணடிக்காமல் அந்த திசையில் செல்ல வேண்டும். இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து தீர்வு காண வேண்டும்” என்று மோடி கூறினார்.
உக்ரைன் அதிபருக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “எனது உக்ரைன் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியா - உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் நான் இந்த மாபெரும் தேசத்திற்கு வந்தேன். நான் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உடன் ஆக்கப்பூர்வமான பேச்சுக்களை நடத்தினேன். அமைதி எப்போதும் நிலவ வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. உக்ரைன் அரசாங்கம் மற்றும் மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் முழுவதும் ரஷ்ய ஏவுகணைகள் தாக்கி ஏராளமான மக்களைக் கொன்ற நாளில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தபோது, ஜூலை மாதம் மாஸ்கோவிற்கு அவரது பயணத்தை ஜெலென்ஸ்கி விமர்சித்த ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் வருகை வந்துள்ளது.
அந்த சந்திப்பை "பெரிய ஏமாற்றம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு பேரழிவு தரும் அடி" என்று ஜெலென்ஸ்கி விவரித்தார்.
'மைல்கல் வருகை'
வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பயணம் குறித்து பேசுகையில், பிராந்தியத்தில் விரைவில் அமைதி திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எளிதாக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார் என்று தெரிவித்தார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளும் தூதரக உறவை ஏற்படுத்திய பின்னர், உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
“பிரதமர் மோடிக்கும் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் இடையேயான பெரும்பாலான விவாதங்கள் உக்ரைன் போர் தொடர்பானவை. விரைவில் அமைதி திரும்புவதற்கு அனைத்து வழிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்” என்று ஜெய்சங்கர் கூறினார்.
"இந்த விஷயத்தில் இந்தியாவும் பிரதமரும் பல பொது நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர்... இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இது போரின் சகாப்தம் அல்ல என்று பிரதமர் பகிரங்கமாக கூறினார், மேலும் உரையாடல் மற்றும் இராஜதந்திரம் முக்கியம் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். போர்க்களத்தில் இருந்து தீர்வு வராது என்று சமீபத்தில் பிரதமர் வலியுறுத்தினார் என்று ஜெய்சங்கர் கூறினார்.
பிரதமர் மோடியின் வருகை ஒரு முக்கிய பயணம் என்று கூறிய ஜெய்சங்கர், 1992 ஆம் ஆண்டு உக்ரைன் தூதரக உறவுகளை நிறுவியதற்கு பின் இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைன் செல்வது இதுவே முதல் முறை என்று கூறினார். “பிரதமர் காலையில் சிறப்பு ரயிலில் வந்தடைந்தார், அவரை கீவ் ரயில் நிலையத்தில் முதல் துணை வெளியுறவு அமைச்சர் வரவேற்றார்… கலந்துரையாடலில், அதில் கணிசமான பகுதி நமது இருதரப்பு உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, மருந்து, விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது,” என்று ஜெய்சங்கர் கூறினார்.
உக்ரைன் அதிபரை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்கள்: ஏஜென்சிகள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.