மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் கடந்த ஆண்டு 4.80 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதனால் 1.72 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகள் குறித்த 2022 தரவுகளுடன் ஒப்பிடும் போது, விபத்துக்கள் 4.2 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இறப்புகள் 2.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India continues to top road accidents fatalities globally, with over 1.72 lakh deaths in road crashes in 2023, says Gadkari
இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த 2023 அறிக்கையை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. லக்னோவில் சாலைப் பாதுகாப்பு குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கட்காரி, விபத்தில் உயிரிழந்தவர்களில் 10,000 பேர் சிறார்கள் என்று கூறினார்.
”பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 35,000 விபத்துக்கள் மற்றும் 10,000 இறப்புகள் நடந்துள்ளன. மொத்தம் 35,000 பாதசாரிகள் உயிரிழந்தனர். ஹெல்மெட் அணியாததால் 54000 இறப்புகளும், சீட் பெல்ட் அணியாததால் 16000 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. அதிக பாரம் ஏற்றிய வாகனங்களால் மொத்தம் 12000 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், முறையான உரிமம் இன்றி வாகனம் ஓட்டி 34000 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. பிரேக் போட முடியாத பழைய வாகனங்களாலும் உயிரிழப்புகள் நடக்கின்றனர்”என்று கட்காரி கூறியுள்ளார்.
இதில் மிக முக்கியமான விஷயம், உலகிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் இந்தியாவில்தான் நிகழ்கின்றன என்றும், இதில் உத்தர பிரதேசத்தில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் கட்கரி கூறினார்.
"உ.பி.யில் 44000 சாலை விபத்துகள் நடந்துள்ளன, இவற்றில் 23650 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1800 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள், 10000 பேர் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளும் ஆவர். அதிக வேகம் காரணமாக 8726 பேர் இறந்துள்ளனர்” என்று கட்காரி தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் மீது மக்களுக்கு மரியாதை மற்றும் பயம் இல்லாததால்தான் இந்த விபத்துகள் நடக்கின்றன என்று கட்காரி கூறினார்.
"விபத்துகளுக்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் மிகப்பெரிய காரணம் மனித நடத்தை. பல இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் இருப்பதும் உண்மைதான். தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40,000 கோடி ரூபாய் செலவில் இதுபோன்ற இடங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து சாலைகளும் எனக்கு கீழ் இல்லை. நான் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மட்டுமே. பல மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகள் உள்ளன. இது மாநில அரசுக்கும் கவலை அளிக்கிறது. விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய முடியும்'' என்று அவர் கூறியுள்ளார்.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையை மேம்படுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மாநில அரசு தனது பாடத்திட்டத்தில் சாலை விதிகளை உள்ளடக்கியிருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம். 2024க்குள் விபத்துகளை 50 சதவீதம் குறைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்னும் குறையவில்லை. இதன் பொருள் நாம் அதிக வேலை செய்ய வேண்டும்” என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சராசரியாக, 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1,317 சாலை விபத்துகள் மற்றும் 474 இறப்புகள் அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 55 விபத்துக்கள் மற்றும் 20 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.