Shubhajit Roy
இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனியை ரஷ்யா வெற்றி கொண்டு 75வது ஆண்டு நிறைவடைவதையொட்டி வெற்றி விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா செல்ல உள்ளார். ரஷ்யாவின் வெற்றிப்பேரணி, ஜூன் 24ம் தேதி தலைநகர் மாஸ்கோவில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
ஜூன் 23ம் தேதி மாஸ்கோவில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையில், ரஷ்ய - இந்தியா - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், டெல்லி -பீஜிங் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க வழிவகை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக, ரஷ்யா, தொடர்ந்து இந்திய அரசுடன் தொடர்பில் இருந்து வருகிறது. 2017ம் ஆண்டு நிகழ்ந்த டோக்லாம் விவகாரத்தின்போதும், ரஷ்யாவிடம் இதுகுறித்து இந்தியா மற்றும் சீனா விவாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய எல்லையில் சீனா நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாாரி உள்ளிட்ட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மாவிடம், ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் இகோர் மார்குலோவ், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த ஆலோசனையில், இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு நடவடிக்கை, ஹிமாலய மலைத்தொடரில், இந்திய - சீன நாடுகளுக்கிடையே உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் முன்னேற்றம் உள்ளிட்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டன.
ஜூன் 6ம் தேதிக்கு முன்னதாக இந்திய - சீன லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து, மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தவ் சிறிங்கலா, ரஷ்ய தூதர் நிகோலே குடோசேவ்விடம் விளக்கியிருந்தார்.
ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ள முத்தரப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில், இந்திய - சீன விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
ரஷ்யா - இந்தியா -சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பு, கடந்த மார்ச் மாதமே நடைபெற இருந்தது. தற்போது நாளை (23ம் தேதி) நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கலந்துகொள்ள உள்ளனர்.
இந்திய - சீன எல்லை விவகாரத்தில், ரஷ்யா நேரடியாக தலையிட விரும்பவில்லை. இருநாடுகளின் அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் திறந்த மனதுடன் ஈடுபட்டு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென இருநாட்டு தலைவர்களை கேட்டுக்கொள்வதாக ரஷ்ய தூதர் குடசேவ், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் இந்த வெற்றிப்பேரணி, கடந்த மே மாதம் 9ம் தேதி நடைபெற இருந்தது. இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார்.
சீன தரப்பிலிருந்தும், அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சரே, இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்.
இந்த வெற்றி பேரணி நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் சீனாவின் படைகளும் கலந்துகொள்ள உள்ளது இதற்காக, மேஜர் ராணுவ அதிகாரி தலைமையிலான 75 பேர் கொண்ட இந்திய படை, மாஸ்கோ சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.