இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை இன்று கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத் துறை அறிவிப்பின்படி, நேற்று வரை நாடு முழுவதும் 99.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 74 விழுக்காடு மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 31 விழுக்காடு மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளன.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், " நாட்டில் தடுப்பூசி 100 கோடியை நெருங்கியுள்ளது. இத்தகைய பொன்னான நிகழ்வில் ஒரு அங்கமாக நீங்கள் மாற, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவின் இந்த வரலாற்று தடுப்பூசி பயணத்திற்கு உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்" என பதிவிட்டிருந்தார்.
தரவுகளின்படி, மொத்த தடுப்பூசி அளவுகளில் 65 சதவிகிதத்திற்கும் மேல் கிராமப்புறங்களில் செலுத்தப்பட்டுள்ளது. இது தடுப்பூசி செலுத்துவதில் சமபங்கைக் காட்டுகிறது. மொத்தமாக 8 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது. உத்தரப் பிரதேசம் 12.08 கோடி, மகாராஷ்டிரா 9.23 கோடி, மேற்கு வங்கம் 6.82 கோடி, குஜராத் 6.73 கோடி, மத்திய பிரதேசம் 6.67 கோடி, பிகார் 6.30 கோடி, கர்நாடகா 6.13 கோடி, ராஜஸ்தான் 6.07 கோடி ஆகும்.
இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசி ஜனவரி 16 ஆம் தேதி சுகாதாரத் துறை பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது. பின்னர், மார்ச் 1 ஆம் தேதி, 60 வயது மேற்பட்டவர்களுக்கும், ஏப்ரல் 1 ஆம் தேதி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த முடிவு செய்தது. அதே வேகத்தில் மே 1 ஆம் தேதி, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
ரயில்வே நிர்வாகம் இந்தியாவின் தடுப்பூசி சாதனையை ரயில் பயணத்தின் போது மக்களுக்குத் தெரிவிக்க முடிவு செய்துள்ளது. இன்று அக்டோபர் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணிக்குள் 100 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil