அடுத்த மாதம் கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 மாநாடு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் இந்தியா தனது நிலைப்பாட்டை அக்டோபர் 27 அன்று நடக்கும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி செய்யும் என்று அறியப்படுகிறது.
சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஆதாரங்களின்படி, உச்சிமாநாட்டில் இந்தியாவின் முக்கிய விவாதம், தொழில்நுட்பம் மற்றும் காலநிலை நிதியை வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாட்டிற்கு மாற்றுவதைச் சுற்றியே தொடரும்.
உச்சிமாநாட்டின் முக்கிய பிரச்சினைகளில் காலநிலை நியாயமான பங்கு, காலநிலை இலட்சியம், காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேதம் மேம்பாடு மற்றும் கார்பன் சந்தைகள் ஆகியவை அடங்கும்.
அமைச்சகத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு, வளர்ந்த நாடுகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பில் பெரிய பங்களிப்பு இருக்கும் என்பதாகும். மேலும், இதன் காரணமாகவே வளரும் நாடுகளில் குறிப்பாக தீவு-நாடுகளில் பேரழிவுகள் ஏற்பட்டது என்றும் இந்தியா கருதுகிறது.
"வெப்பநிலை அதிகரிப்பதை மறுப்பதற்கில்லை, தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளன, மேலும் வளரும் நாடுகள் அதன் தாக்கத்தை அதிகம் உணர்கிறது" என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், "மாசுபடுத்துபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றக் கொள்கையை நாங்கள் நம்புகிறோம், அது COP26 இல் எங்கள் நிலைப்பாடாக இருக்கும். வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு வழிவகுத்த பெரும்பாலான உமிழ்வுகளுக்கு வரலாற்று ரீதியாக பங்களித்த வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு நிதி உதவி செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும் மற்றும் இழப்பீட்டு செயல்முறையை நிறுவ வேண்டும்." என்றும் அந்த அதிகாரி கூறினார்.
வளர்ந்த நாடுகளிடம் இருந்து ஆண்டுக்கு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான காலநிலை நிதி உறுதிப்பாட்டை இந்தியா கோரும் என்று அந்த அதிகாரி கூறினார்.
"வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு என்டிசி <தேசிய ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட கார்பன் பங்களிப்புகள்> லட்சியத்தை அதிகரிக்க அல்லது கார்பன் உமிழ்வின் நிகர பூஜ்ஜிய இலக்குகளை அடைய அழுத்தம் கொடுத்தால், முதலில் அவர்கள் ஏற்கனவே அடைந்த இலக்குகளை நமக்குக் காட்ட வேண்டும். இரண்டாவதாக, வளரும் நாடுகளுக்கு அவர்கள் செய்த $100 பில்லியன் வருடாந்திர உறுதிமொழியை அவர்கள் வழங்க வேண்டும், அது இதுவரை செலுத்தப்படவில்லை,” என்று அந்த அதிகாரி கூறினார். வளரும் நாடுகள் "காலநிலை நிதி இல்லாமல் காலநிலை இலக்குகளை அடைய முடிந்ததைச் செய்து வருகின்றன. வளர்ந்த நாடுகள் அதிகம் எதிர்பார்க்கும் பட்சத்தில் அதற்கான நிதியை வழங்க வேண்டும்” என்று அந்த அதிகாரி கூறினார்.
15 பேர் கொண்ட இந்தியக் குழுவில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம், புவி அறிவியல், விவசாயம் மற்றும் நிதி அமைச்சகங்களின் அதிகாரிகளைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையேயான குழு இருக்கும்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளர் மற்றும் கூடுதல் செயலாளர் (காலநிலை மாற்றம்) ரிச்சா ஷர்மா தலைமையில் இந்த குழு இருக்கும். சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ் மற்றும் அஷ்வினி சௌபே மற்றும் செயலாளர் ஆர்.பி.குப்தா ஆகியோர் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
பரந்த உமிழ்வு இடைவெளி
இந்தியாவின் ஆண்டு தனிநபர் கார்பன் உமிழ்வு ஒரு நபருக்கு 1.96 டன், சீனாவின் 8.4 டன். பிற பெரிய கார்பன் உமிழ்ப்பாளர்களில் அமெரிக்கா (18.6 டன்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (ஒரு நபருக்கு 7.16 டன்) ஆகியவை அடங்கும். உலகத்தின் சராசரி கார்பன் உமிழ்வு ஒரு நபருக்கு 6.64 டன்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.