பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பலூசிஸ்தான் மாகாணம் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் கோரி பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். இவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர்.
மார்ச் 11-ஆம் தேதி இவர்கள் 400 பயணிகளுடன் ரயிலை கடத்தினர். பின்னர், பாகிஸ்தான் ராணுவம் 33 கிளர்ச்சியாளர்களை கொன்று பயணிகளை மீட்டது. இப்போது, இந்த ரயில் கடத்தல் சம்பவத்துக்கு இந்தியா காரணமென்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ரயில் கடத்தப்பட்டது முதலே பாகிஸ்தான் ராணுவம், அரசு, மீடியாக்கள் பெயரை குறிப்பிடாமல் இந்தியா காரணமென்று மறைமுகமாக கூறிக் கொண்டிருந்தன.
/indian-express-tamil/media/media_files/2025/03/14/iIh5UZI0cBm960fcVqy3.jpg)
இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சவுகத் அலிகான் கூறுகையில், “பாகிஸ்தானில் பயங்கரவாத செயல் அரங்கேற இந்தியா பின்னணியில் உள்ளது. ரயில் கடத்தல் சம்பவத்தில் ஆப்கானிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள, இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸ்ரீ ரந்தீர் ஜெய்ஷ்வால், “பாகிஸ்தானின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறோம். பயங்கரவாதத்தின் மையம் எது என்பது உலகிற்கே தெரியும்.தனது உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும் தோல்விகளுக்கும் மற்ற நாடுகளே காரணம் எனப் பழிசுமத்துவதை விட்டுவிட்டு, தனது பிரச்சினைகளில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சாடியுள்ளார். தங்களது உள்நாட்டு பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல் மற்றவர்கள் மீது கை காட்டுவது தவறு என்றும் அவர் கண்டித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடும் பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக , அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் தங்களது உள்நாட்டு பாதுகாப்பை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். எங்கள் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த கூடாது” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.