India Tamil News: பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் கடந்த 5ம் தேதி நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது. அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ. 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார்.
ஆனால், அந்த பகுதியில் நடந்த போரட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால், பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15- 20 நிமிடங்கள் அப்படியே நின்றது. பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடியின் காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. எனவே, உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார்.

பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து உரிய விளக்கம் அளிக்க பஞ்சாப் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பஞ்சாப் முதல்வரை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

இந்த சர்ச்சைக்கு முன்பு வரை தேசிய அளவில் பெரிதாக கவனம் பெறாமல் இருந்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தற்போது தனது பேட்டிகள் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறார். தனது அதிரடியான கருத்துக்கள் மூலம் தான் ஒரு வலுவான தலைவர் என்பதையும் நிரூபித்து வருகிறார். மேலும், தன் மீது தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு அதிரடி பதில்களை அளித்தும் வருகிறார்.
இந்நிலையில், பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி பேசுகையில், “பிரதமர் மோடியின் பஞ்சாப் வருகையின் போது எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை. அவர் முதலில் ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவே இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எங்களிடம் ஏதும் சொல்லாமல் கார் மூலமாக வந்துவிட்டார். அவரது கான்வாய் வந்த பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் 3 மணிக்கே முடியும் என்று கூறப்பட்டது.

பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக கூட்டத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் 700 பேர் மட்டுமே வந்தனர். இதை மறைக்க தற்போது ஏதேதோ விஷயங்களை அவர்கள் காரணமாக சொல்கிறார்கள்.
இதில் எப்படி பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருந்திருக்க முடியும்?. பிரதமர் மோடி நினைத்து இருந்தால் போராட்டக்காரர்களிடம் பேசி இருக்கலாம். போராட்டம் செய்வது என்பது மக்களின் உரிமை. அதை தவறு என்று சொல்ல முடியாது.
நானும் நம்முடைய பிரதமரை மதிக்கிறேன். அவர் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். அவரின் உடல் நலத்திற்காக நானும் கடவுளிடம் வேண்டுகிறேன். அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று கூறி விளக்கமளித்துள்ளார்.

அவரின் இந்த தெளிவான விளக்கத்திற்கு பிறகும் அவர் மீது எதிர்க்கட்சிகளும், பாஜகவினரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி சர்தார் வல்லபாய் பட்டேலின் வாசகம் ஒன்றை வைத்து பதிலடி கொடுத்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வாசகம், “தன் கடமையை விட தன் உயிரைப் பற்றி கவலைப்படுபவர், இந்தியா போன்ற நாட்டில் பெரிய பொறுப்பை ஏற்கக்கூடாது! – சர்தார் வல்லபாய் படேல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
जिसे कर्त्तव्य से ज़्यादा जान की फ़िक्र हो, उसे भारत जैसे देश में बड़ी जिम्मेदारी नहीं लेनी चाहिए !
— Charanjit S Channi (@CHARANJITCHANNI) January 7, 2022
– सरदार वल्लभभाई पटेल pic.twitter.com/zefpEroVAF
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“