இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வரும் 2018-ஆம் ஆண்டில், முதல் இலக்காக வரும் ஜனவரி 10-ஆம் தேதி 31 செயற்கைக்கோள்களுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் என தெரிவித்துள்ளது.
கார்டோசாட் 2 செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் கூடிய ராக்கெட், ஜனவரி 10-ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
”காலை 9.30 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இதில், அமெரிக்கா உட்பட 5 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக் கோல்களும் அடங்கும்”, என இஸ்ரோ இயக்குநர் தேவி பிரசாத் கார்னிக், ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோளை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தமுடியாமல் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என, இஸ்ரோ தலைவர் கிரண் குமார் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் நானோ மற்றும் மைக்ரோ செயற்கைக்கோள்கள் என இரண்டு செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும். கார்டோசாட் 2 செயற்கைக்கோள் மூலம், நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளின் வரைபடங்கள், கடற்கரை பகுதிகளின் பயன்பாடு, ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும்.