தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்த பதிவுகளின்படி, பெரும் பூனைகளைப் பாதுகாக்க இந்தியா தனது தலைமையில் ஒரு மெகா உலகளாவிய கூட்டணியைத் தொடங்க முன்மொழிந்துள்ளது மற்றும் ஐந்து ஆண்டுகளில் 100 மில்லியன் டாலர் (ரூ 800 கோடிக்கு மேல்) உத்தரவாதமான நிதியுதவியுடன் இதற்கான ஆதரவை உறுதி செய்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச பெரும் பூனை கூட்டமைப்பு (International Big Cat Alliance – IBCA) புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் மற்றும் சிவிங்கி புலி ஆகிய ஏழு பெரும் பூனைகளின் பாதுகாப்பு மற்றும் பேணுதலை மையமாகக் கொண்டுச் செயல்படும். இந்த பெரும் பூனைகளின் இயற்கையான வாழ்விடங்கள் மற்றும் ஆர்வமுள்ள பிற நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் போன்றவற்றைக் கொண்ட 97 “வரம்பு” நாடுகளுக்கு கூட்டணியில் உறுப்பினர் சேர்க்கை திறந்திருக்கும்.
இதையும் படியுங்கள்: ‘காங்கிரஸ் அவமதித்த தலைவர்கள்’- மோடி குற்றச்சாட்டு.. யார் இந்த நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல்?
கடந்த மாதம், IBCA உறுப்பினர் நாடுகளை இந்திய அரசாங்கம் தனது முன்மொழிவுடன் அணுகியது. முன்மொழியப்பட்ட காலக்கெடுவின்படி, இந்த கூட்டணி அடுத்த மாதம் இந்தியாவில் “பொருத்தமான அலுவலக வளாகத்தில்” தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதாரங்களின்படி, இந்த கூட்டமைப்பு யோசனை கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து “சிவிங்கி புலிகளின் வருகை காரணமாக” முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“நமக்கு சிவிங்கி புலிகள் கிடைத்ததிலிருந்து, உலகில் புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், பனிச்சிறுத்தைகள் மற்றும் சிவிங்கி புலிகளைக் காடுகளில் கொண்டு உள்ள ஒரே நாடு நாம்தான். இன்று நம்மிடம் பூமாக்கள் மற்றும் ஜாகுவார் தவிர அனைத்து பெரும் பூனை இனங்களும் உள்ளன. எனவே, அனைத்து பெரும் பூனை இனங்களைக் கொண்ட நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற குடையின் கீழ் ஒன்றாகக் கொண்டுவருவதற்கு இந்தியா முன்னோடியாக இருப்பது பொருத்தமானது,” என்று ஒரு அதிகாரி கூறினார்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் (வனம்) மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) உறுப்பினர் செயலாளரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.
பெரும் பூனைகளின் பாதுகாப்பு குறித்த “தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள், திறன் மேம்பாடு, வளங்கள் களஞ்சியம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விழிப்புணர்வு உருவாக்கம்” போன்றவற்றைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கான தளத்தை வழங்குவதே கூட்டணியின் நோக்கம் என்று பதிவுகள் காட்டுகின்றன.
அதன் முக்கிய நடவடிக்கைகளில் “சட்டம், கூட்டாண்மை, அறிவு இ-போர்ட்டல், திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் சுற்றுலா, நிபுணர் குழுக்களுக்கு இடையேயான கூட்டாண்மை மற்றும் நிதித் தட்டுப்பாடு” ஆகியவை அடங்கும்.
IBCAவின் நிர்வாகக் கட்டமைப்பானது அனைத்து உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பொதுச் சபையைக் கொண்டிருக்கும், 5 ஆண்டுகளுக்கு பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கவுன்சில் இருக்கும், ஆனால் 15 உறுப்பு நாடுகளுக்கு மேல் இருக்க கூடாது, மற்றும் ஒரு செயலகம் இருக்கும். கவுன்சிலின் பரிந்துரையின் பேரில், பொதுச் சபை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு IBCA பொதுச் செயலாளரை நியமிக்கும்.
முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் “மொத்த மானிய உதவி” $100 மில்லியன் மூலம் ஆதரிக்கப்படும், IBCA உறுப்பினர் கட்டணங்கள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புகள் மூலம் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முன்மொழியப்பட்ட நடவடிக்கை விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது.
“நமக்குத் தெரிந்ததைச் செய்வதற்கான அரசியல் விருப்பம் இல்லாமல், மற்றொரு தளத்தை உருவாக்குவது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவாது. அழிவின் விளிம்பில் உள்ள 22 உயிரினங்களுக்காக இந்தியா செலவழிக்க முடிந்ததை விட (IBCAவுக்கான) நிதி உறுதிப்பாடு அதிகம்,” என்று திட்டத்தை அறிந்த ஒரு சுற்றுச்சூழல் பாதுகாவலர் கூறினார்.
அரசாங்கத்துடன் முன்னர் ஒருங்கிணைந்து பணியாற்றிய ஒரு பெரும் பூனை உயிரியலாளர், “பல்வேறு முக்கிய நிலப்பரப்புகள் மற்றும் இனங்கள் மீட்பு திட்டங்கள் போதிய நிதியில்லாமல் நலிவடைந்துள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், அரசு அதிகாரி ஒருவர் கூறினார்: “நிதி நியாயமற்றது அல்ல, ஏனெனில் அத்தகைய வரம்புகளை கடக்க தேவையான தொலைநோக்கு பார்வையை IBCA வழங்கும். இது அளவு, நோக்கம் மற்றும் செயல்பாடுகளில் முன்னோடியில்லாத ஒரு பாதுகாப்பு கூட்டணியாகும்.”
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil