Budget 2020 Key Features : நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்று கூறி இந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முயற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது என்றும் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.
வேளாண் துறை: வேளாண் துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
வேளாண் துறையைப் போட்டிகள் நிறைந்ததாக மாற்றவும், வேளாண் சந்தையை தாராளமயமாக்கவும் 15 அம்சங்கள் கொண்ட செயல் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.
முன்மாதிரி விவசாயநிலா குத்தகைச் சட்டம் 2016,முன்மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடைச் சந்தை சட்டம் 2017, முன்மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் மேம்பாடு மற்றும் வசதி சடட்ம் 2018 போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரதான் மந்திரி குசும் திட்டத்தால் விவசாயிகள் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் சார்ந்திருப்பது தவிர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர், இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு, 20 லட்சம் சோலார் பம்புகள் அமைக்க வழிவகுக்க செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு,விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
வேளாண் கடனுக்கான நிதி ஒதுக்கீடு, 15 லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்படும். பால் பதப்படுத்துதல் அளவை இரட்டிப்பாக்கவும், மீன் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2020-21 மதிப்பீடு ஆண்டில், வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சிக்கு 1.23 லட்சம் கோடி நிதிஒதுக்கீடும் செய்திருக்கிறது.
சுகாதாரத்துறை: 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம். தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி நிதி ஒதுக்கீடு.
இந்திர தனுஷ் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, கூடுதலாக 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கல்வித்துறை: 2020-21 ஆம் ஆண்டின் கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாயும், திறன் மேம்பாட்டுக்கு சுமார் ₹ 3,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இளம் பொறியாளர்களுக்கு ஒரு வருடம் இன்டர்ன்ஷிப் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் முதல் 100 இடங்களைப் பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பை ஆன்லைன் மூலம் வளங்கும் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தும்.
வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் “இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்” திட்டம் ஆசிய, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பிரபலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
கல்விக் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறிய நிதியமைச்சர்,வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
தேசிய போலிஸ் பல்கலைக்கழகம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொழில்துறைக்கும், வர்த்தகத் துறை : தொழில் முனைவோரே இந்தியாவின் பலம். வேலைவாய்ப்பை உருவாக்குவோர் அவர்களே என்று கூறிய நிதியமைச்சர் அவர்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க சிறப்பு பிரிவு எற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறிய நிதி அமைச்சர், கட்டமைப்புத் துறைக்கு 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும் கூறினார்.
தில்லி-மும்பை இடையேயான அதிவிரைவுச் சாலை 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், கூடுதலாக தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும். 27,000 கிமீ தொலைவுக்கு ரயில்பாதை மின்மயமாக்கப்படும் என்றும் தெரிவித்தார். இறுதியாக, தொழில்துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் 27,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
நாடுமுழுவதும் உடான் திட்டத்தின்கீழ் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும். குழாய் வழியே சமையல் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்து, கூடுதலாக 16,200 கிமீ தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
வங்கித் துறை: முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்டும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகள் விதிகளில் பெருமளவு மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
காற்று மாசு: சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பழைய அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறிய நிதி அமைச்சர், அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றினால் அந்த அனல் மின் நிலையங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
சுத்தமான காற்று திட்டத்திற்கு 44,000 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்த அமைச்சர், சுற்றுச்சூழலை பாதுகாக்க சுத்தமான காற்று இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் என்று கூறிய நிதி அமைச்சர், பட்டியலினத்தவருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும்,பழங்குடியினர் நலனுக்கு 53,700 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக கூறிய நிதி அமைச்சர், நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தனிநபர் வருமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டது – ரூ. 5 முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம், ரூ. 7.5 - 10 லட்சம் வரை 15 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. ரூ. 10 முதல் ரூ. 12.5 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ. 12.5 முதல் ரூ. 15 லட்சம் வரை 25 சதவீதமும் வருமான வரி விகிதம் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 15 லட்சத்திற்கு கூடுதலாக வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லை, அவர்கள் 30 சதவீத வருமான வரி செலுத்துவார்கள். புதிதாக எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிச் சீர்திருத்தங்களில், விலக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.