/indian-express-tamil/media/media_files/2025/08/17/modi-trump-1-2025-08-17-09-24-41.webp)
ஹெச்-1பி விசா கட்டண உயர்வு: 'மனிதநேய விளைவுகள் ஏற்படும்' என இந்தியா எச்சரிக்கை
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா விண்ணப்பக் கட்டணம் $100,000 (சுமார் ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டுள்ளதற்கு, இது "குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் மனிதநேய விளைவுகளை" ஏற்படுத்தும் என இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்களை அமெரிக்க அதிகாரிகள் சரிசெய்வார்கள் என நம்புவதாகவும் இந்தியா கூறியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசுகையில், "அமெரிக்க ஹெச்-1பி விசா திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை இந்திய அரசு கவனித்துள்ளது. இந்திய தொழில் துறை உட்பட அனைத்து தரப்பினரும் இந்த நடவடிக்கையின் முழு விளைவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்" என்றார். இந்திய-அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள தொழில்துறைகளுக்கு "கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலில்" பங்கு உண்டு என்றும், இந்த விவகாரத்தில் 2 நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
"திறமையானவர்களின் போக்குவரத்து மற்றும் பரிமாற்றங்கள், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொழில்நுட்ப வளர்ச்சி, கண்டுபிடிப்பு, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வ செழிப்பு ஆகியவற்றுக்கு அபரிமிதமான பங்களிப்பை அளித்துள்ளன. எனவே, கொள்கை வகுப்பாளர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மக்கள் தொடர்புகள் உட்பட பரஸ்பர நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை மதிப்பிட வேண்டும்" என்று ரண்தீர் ஜெய்ஸ்வால் மேலும் தெரிவித்தார்.
ஹெச்-1பி விசா மற்றும் இந்தியர்கள்
தற்போது, 1 ஹெச்-1பி விசாவுக்கான கட்டணம், நிறுவனத்தின் அளவை பொறுத்து $2000 முதல் $5000 வரை உள்ளது. இந்த விசா 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், மேலும் மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க முடியும். புதிய கட்டணம் விதிக்கும் இந்த நடவடிக்கை, "ஹெச்-1பி விசா முறை துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்துவதை" நோக்கமாகக் கொண்டாலும், இதனால் இந்தியத் திறமையான வல்லுநர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை வழங்கப்பட்ட சுமார் 4 லட்சம் ஹெச்-1பி விசாக்களில், 72% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. இதே காலகட்டத்தில், அமெரிக்காவில் கிளைகள் உள்ள இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் மற்றும் விப்ரோ போன்ற நான்கு முன்னணி இந்திய ஐடி நிறுவனங்கள், சுமார் 20,000 ஊழியர்களுக்கு ஹெச்-1பி விசாக்களைப் பெற்றன.
புதிய கட்டண உயர்வு செப்டம்பர் 21, 12:01 AM முதல் அமலுக்கு வருகிறது. இதனால், தற்போது அமெரிக்காவுக்கு வெளியே வேலை அல்லது விடுமுறையில் உள்ள ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டிய அவசரத்தில் உள்ளனர். இல்லையெனில், அவர்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டு, மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாமல் போகும் அபாயம் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.