நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மழைக்கால கூட்டத் தொடர் திட்டமிடப்பட்ட நாட்களுக்கு முன்னதாக முடிக்க ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
தாக்கல் செய்ய திட்டமிடப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றுமாறு கருவூலப் பெஞ்சுகள் தெரிவித்தது. முக்கிய விசயங்களுக்கு அரசு விளக்கமளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. கூட்டத் தொடரை விரைந்து முடிப்பதற்கான இறுதி முடிவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 தொற்று பாதிப்பைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத் தொடர் அக்டோபர் 1 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது.
சபாநாயகர் இன்று பிற்பகல், கூட்டத் தொடரை விரைந்து முடிப்பது தொடர்பாக நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் (பிஏசி) அவசரக் கூட்டத்தை கூட்டி விவாதித்தார். " நோய்ப் பரவலைக் கருத்திற்கொண்டு அமர்வைக் குறைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ள்ளது. புதன் அல்லது வியாழக்கிழமைக்குள், சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார்" என்று கூட்டத்திற்குப் பிறகு பிராந்திய கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
தான் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்ட அனைத்து மசோதாக்களையும் தாக்கல் செய்ய விரும்புவதாக அரசாங்கம் கூட்டத்தில் வலியுறுத்தியது. கோவிட் -19 நிலைமை, பொருளாதார மந்தநிலை தேசிய கல்வி கொள்கை உள்ளிட்டவற்றை விவாதிக்க விரும்புவதாக காங்கிரஸ் வலியுறுத்தியது. ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து விவாதிக்க விரும்புவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்தது.
"மிகவும் மோசமான சூழ்நிலையில், கொரோனா நிலைமையைப் பற்றி விவாதிக்க விரும்புகிறோம்" என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.
பிஏசி- யின் முந்தைய கூட்டத்தில், அரசாங்கம் 14 மசோதாக்களை பட்டியலிட்டது. அவற்றில் எட்டு மட்டுமே தற்போதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆறு மசோதாக்களுக்கு எதிர்வரும் நாட்களில் நேரம் ஒதுக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
தொழில் உறவுகள் குறித்த சட்டம், சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்த தொழிலாளர் சட்டம், பணியிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் குறித்த தொழிலாளர் சட்டம், ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
கடந்த வாரத்தில் மட்டும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரஹ்லாத் படேல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மற்றும் பல பாராளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.