கடந்த மே 7-ம் தேதி அன்று பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் 5 போர் விமானங்களையும், ஒரு பெரிய விமானத்தையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடந்த 16-வது ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரே நினைவு சொற்பொழிவில் கலந்துகொண்டு பேசிய ஏ.பி. சிங், “குறைந்தது 5 போர் விமானங்களும், ஒரு பெரிய விமானமும் அழிக்கப்பட்டதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். பெரிய விமானம் ELINT விமானமாகவோ (எலக்ட்ரானிக் உளவு விமானம்) அல்லது AEW&C விமானமாகவோ (வான்வழி முன்னறிவிப்பு மற்றும் கட்டுப்பாடு) இருக்கலாம். அது சுமார் 300 கி.மீ. தொலைவிலிருந்து தாக்கி அழிக்கப்பட்டது. இது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மேற்பரப்பில் இருந்து வான்வழித் தாக்குதலில் மிகப்பெரிய சாதனை என்று நாங்கள் சொல்லலாம்” என்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
விமானங்கள் தவிர, பாகிஸ்தானின் பல ஆளில்லா வான்வழி வாகனங்களும் (UAVs),ட்ரோன்களும் அழிக்கப்பட்டன. அவற்றில் சில ட்ரோன்களின் ஏவுகணைகள் இந்திய எல்லைக்குள் விழுந்ததாகவும், அவற்றின் பாகங்கள் மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த ஆய்வு மூலம், அந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டன, அவை சென்ற பாதை, அவற்றில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதன் வகை போன்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தாக்குதலில் பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ்-இ-முகமது (Jaish-e-Mohammed) தலைமையகத்தில் ஏற்பட்ட சேதத்தை, தாக்குதலுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுக் காட்டினார். “இங்கு பெரிய அளவில் சேதங்கள் இல்லை. அருகிலுள்ள கட்டிடங்கள் சேதமடையாமல் உள்ளன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் மட்டுமின்றி, உள்ளூர் ஊடகங்கள் மூலம் உட்புறப் படங்களும் எங்களுக்குக் கிடைத்தன” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டதாக சிங் பாராட்டினார். “நாங்கள் சமீபத்தில் வாங்கிய S-400 அமைப்பு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்த அமைப்பின் வரம்பு, பாகிஸ்தான் விமானங்களை அதன் தொலைதூர ஏவுகணைகளான 'லாங் ரேஞ்ச் க்ளைட் பாம்ப்'களைப் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தள்ளிவைத்தது. இந்த அமைப்பை ஊடுருவி பாகிஸ்தானால் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த முடியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஷபாஸ் ஜாக்கோபாபாத் விமான நிலையம் தாக்கப்பட்ட முக்கியத் தளங்களில் ஒன்று என்பதையும் ஏ.பி. சிங் சுட்டிக்காட்டினார். “அங்கு F-16 விமான நிறுத்துமிடம் உள்ளது. அதில் பாதி சேதமடைந்துள்ளது. உள்ளே இருந்த விமானங்களும் சேதமடைந்திருக்கும் என நான் நம்புகிறேன். முரிட் மற்றும் சக்லாலா போன்ற இரண்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களையும் எங்களால் தாக்கி அழிக்க முடிந்தது. குறைந்தது 6 ரேடார்களும் சேதமடைந்தன. அவற்றில் சில பெரியவை, சில சிறியவை. ஒரு AEW&C நிறுத்துமிடத்தில் இருந்த AEW&C விமானமும், அங்குப் பராமரிப்பில் இருந்த சில F-16 விமானங்களும் சேதமடைந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.