சூரல்மலை, முண்டகை ஆகிய கிராமங்களை இணைக்கும் இருணை புலா ஆற்றில், குறுகிய நேரத்தில் கனரக வாகனங்கள் செல்லும் வகையில், இந்திய ராணுவம் பாலம் அமைத்து மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிப்புகள் ஏற்பட்டதையடுத்து, இன்று மூன்றாவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சூரல்மலை கிராமத்தில் பெரும்பாலான பேரிடர் மீட்பு பணிகள் முடிந்துள்ளன. எனினும் இருணைபுலா ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஆற்றைக் கடந்து முண்டகை கிராமத்துக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.
நேற்று இந்த இடத்தை ஆய்வு செய்த இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியர் குழுவினர், நேற்று மாலை பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கினார்கள். போர்க்கால அடிப்படையில் மேஜர் சீதா செல்கே தலைமையில் பணிகள் தொடங்கப்பட்டன. சி.ஐ24 பெய்லி பிரிட்ஜ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த பாலப்பணிகள், இன்று மாலை முடிவடைந்தது. சுமார் 400 மீட்டர் தொலைவிற்கு, குறுகிய கால இடைவெளியில் அமைக்கப்பட்ட இந்த இரும்பு பாலத்தில் 24 டன் சுமை தாங்கும் வகையில் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய ராணுவ வாகனம் லாரி ஒன்றும் ஜீப் ஒன்றும் பாலத்தில் வெள்ளோட்டம் விட்டு சோதனை செய்யப்பட்டது. இருணைப்புலா ஆற்றுக்கு கரையில் உள்ள முண்டகை கிராமத்தின் நிலை என்ன என்பது குறித்தும், அதில் எத்தனை பேர் புதைந்துள்ளார்கள் என்ற விவரங்கள் குறித்தும், இனிமேல் தான் தெரிய வரும். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“