/indian-express-tamil/media/media_files/2025/08/04/rahul-gandhi-2025-08-04-16-59-43.jpg)
Rahul Gandhi
இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் போது, சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களைத் தாக்கினர் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கள் குறித்து, “உங்களிடம் ஏதாவது நம்பகமான ஆதாரம் உள்ளதா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
லக்னோவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது முன்னாள் எல்லை சாலைகள் அமைப்பின் (Border Roads Organisation - BRO) இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா அவதூறு வழக்கு தொடர்ந்தார். 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது அவர் பேசிய கருத்துக்கள் இந்திய ராணுவத்தின் மரியாதையைக் குறைப்பதாக உள்ளது என புகார் அளித்தார். இந்த வழக்கில் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசிஹ் அடங்கிய அமர்வு விசாரித்தது. ராகுல் காந்தியின் வழக்கறிஞர் ஏ.எம். சிங்வியிடம் நீதிபதி தீபங்கர் தத்தா, "நாங்கள் இந்தக் கருத்துக்களைப் படித்துள்ளோம்... சொல்லுங்கள்... 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியை சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் ஏதாவது நம்பகமான ஆதாரம் உள்ளதா? எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஏன் இப்படிப்பட்ட கருத்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்?” என்று கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், “நீங்கள் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால், இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்ல மாட்டீர்கள்” என்றும் நீதிபதி தீபங்கர் தத்தா தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் வழக்கறிஞர் சிங்வி, இந்தக் கருத்துக்கள் "பொது நலன்" சார்ந்தது என்று வாதிட்டார். 20 இந்திய வீரர்கள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது ஒரு கவலைக்குரிய விஷயம் என்றும் குறிப்பிட்டார். ஆனால், நீதிபதி தத்தா, “எல்லையில் மோதல் நடக்கும் போது இருபுறமும் உயிரிழப்புகள் ஏற்படுவது அசாதாரணமானதா?
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், இதுபோன்ற கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பலாமே தவிர, பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் நீதிபதி தீபங்கர் தத்தா கூறினார். “நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், பேச்சுரிமை உள்ளது. ஆனால், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக இவ்வாறு செய்வது சரியல்ல” என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் வழக்கறிஞர் சிங்வி, நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டு, கருத்துக்களை வேறு விதமாகத் தெரிவித்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்காக தனிப்பட்ட நபரை அவதூறு வழக்கு மூலம் துன்புறுத்துவது சரியல்ல என்றும் அவர் வாதிட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, இந்த வழக்கை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் விசாரணைக்கு மூன்று வார காலத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.