உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏழாவது நாளாக போரிட்டு வருகிறது. இதற்கிடையில், நேற்று கார்கிவ் நகரில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் என்பவர் , குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தகவல் அங்கிருக்கும் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், தொடர் குண்டுவெடிப்பால் பதற்றம் அடைந்துள்ளனர். இங்கிருந்து புறப்படுவதற்கு இதான் சரியான நேரம் என முடிவெடுத்துள்ளனர். இருப்பினும், அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஹங்கேரி எல்லையை அடைய சுமார் 1500 கிமீ பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஜூனியர்களுக்காக தங்கியிருந்த நவீன்
இந்நிலையில், அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர் அமித் வைஷ்யரை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவது, " திங்கட்கிழமை ஒரு மாணவர்கள் குழு வெளியேறியது. ஆனால், உக்ரைனுக்கு வந்து ஒரு வருடம் கூட நிறைவடையாத ஜூனியர்ஸையும் அழைத்து செல்வோம் என நவீன் பரிந்துரைத்தையடுத்து, ஒருநாள் காத்திருந்தோம். நவீன் தான், புதன்கிழமை காலை புறப்படலாம் என கூறியிருந்தார்.
உணவு வாங்க சென்ற போது மரணம்
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் போதெல்லாம், மளிகைப் பொருட்களை வாங்க ஒன்றாகச் செல்வோம். செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தூங்கச் சென்று தாமதமாக தான் எழுந்தேன். ஆனால், காலை 6 மணிக்கே நவீன் அனைவருக்கும் உணவு வாங்க சென்றிருந்தான். சந்தை நாங்கள் வசிக்கும் பதுங்கு குழியிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ளது.
காலை 7.58 மணிக்கு, பணம் குறைவாக இருப்பதாகவும், அக்கவுண்ட்-க்கு பணம் அனுப்புமாறு எங்கள் குழுவில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான். பின்னர், 8.10 மணிக்கு நவீனுக்கு கால் செய்தோம். ஆனால், அவனுக்கு பதிலாக உக்ரைனியர் ஒருவர் அழைப்பை எடுத்து, அவன் இறந்துவிட்டார் என கூறினார். எங்களுக்கு உணவு வாங்க சென்று நவீன் உயிரிழந்துள்ளான்" என வேதனையுடன் தெரிவித்தார்.
பெங்களூருவில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் சாலகேரி கிராமத்தை சேர்ந்தவர் நவீன். அவரது தந்தை சேகரப்பா ஞானகவுடர், ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் ஆவர். தாயார் விஜயலக்ஷமி ஆகும். நவீனின் மூத்த சகோதரர் ஹர்ஷா, பிஹெச்டி படித்து வருகிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய சேகரப்பா, "திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் நவீன் தொலைப்பேசியில் பேசினான். அப்போது, இங்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஆனால் நான் பாதுகாப்பாக தான் உள்ளேன் என்றான். பின்னர்,செவ்வாயக்கிழமை காலையும் அம்மாவிடம் தொலைப்பேசியில் பேசினான். போர் ஆரம்பித்த பிறகு, வீட்டிற்கு தினமும் 4 அல்லது 5 முறை கால் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நாங்கள் நினைக்கவே இல்லை" என்றார்.
இதையும் படிங்க: உக்ரைன் எல்லையில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்… போலந்து நாட்டுக்குள் நுழைவதில் என்ன சிக்கல்?
தொடர்ந்து, உக்ரைனுக்கு மகனை ஏன் அனுப்பியுள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, இந்தியாவில் மருத்துவம் பயில செலவு அதிகம். சீட் கிடைப்பது மிகவும் கடினம் என்பதால் எனக்கு வேறு வழியில்லை. எனது மகன் 12ஆம் வகுப்பில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்றான். இருப்பினும், மருத்துவ பயில 2 முதல் 3 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால், வெளிநாட்டிற்கு செல்ல முடிவு செய்தான். அங்கு இந்தியாவுடன் ஒப்பிட்டால், செலவு மிகவும் குறைவு தான். இந்தியாவில் கல்வி முறை சரியாக இருந்திருந்தால், நான் இந்த நாளை எதிர்கொண்டிருக்க மாட்டேன்" என்றார்.
கார்கிவ் மாணவர்கள் இந்திய தூதரகம் கைவிட்டது
தொடர்ந்து பேசிய வைஷர், " நவீன் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வான். எங்கள் இருவருக்கு ஒருவித ஸ்பேஷல் பந்தம் இருந்தது. அவன் மரண செய்தியை கேட்டு, அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். குண்டுவெடிப்பு தொடர்ந்ததால், சந்தைக்கு சென்று அவனை பார்க்க அனுமதிக்கவில்லை. கார்கிவில் வசிக்கும் மாணவர்களை தூதரகம் கைவிட்டது. அவர்கள் எந்தவிதமான போக்குவரத்தையும் வழங்கவில்லை. நாங்கள் ஹங்கேரி அல்லது ருமேனியா எல்லைகளை அடைந்தால் மட்டுமே தூதரகம் உதவும்" என்றார்.
200 இந்திய மாணவர்கள் தஞ்சம்
நவீனுடன் ஹாஸ்டலில் முன்பு தங்கியிருந்த ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணனை தொடர்பு கொண்ட போது, கல்லூரி விடுதியில் உள்ள பதுங்கு குழிக்குள் சுமார் 200 இந்திய மாணவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். வெளியேற்றத் திட்டம் குறித்தும் எந்தச் தகவலும் வரவில்லை. பதுங்கு குழியில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்தியர்கள் ஆவர். இந்திய மாணவர்கள் எளிதாக வெளியேற ஒரே வழி, ரஷ்யாவிடம் சிறப்பு அனுமதி பெறுவது தான். ஏனென்றால், ரஷ்யா எல்லை மட்டுமே இங்கிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது.
இங்கு மட்டும் சுமார் 1,500 இந்திய மாணவர்கள் உள்ளனர். அதிக இந்தியர்களைக் கொண்ட கார்கிவில் மூன்று பெரிய மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
வெளியேற்றும் திட்டம் குறித்து உறுதியான தகவல் இல்லாததால், பல மாணவர்கள் கார்கிவ்விலிருந்து ரயிலில் அல்லது வாடகை கார் எடுத்து தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர்.
போலந்து எல்லையில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள லிவ் நகரத்திற்கு செல்ல, நானும் எனது நண்பர்கள் 50 பேரும் முடிவு செய்தோம். ஆனால், நவீன் இறந்த செய்தியை கேட்டதும், ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் பதுங்கு குழிக்கு வந்துவிட்டோம்" என்றார்.
சாக்லேட், பிஸ்கட் சாப்பிட்டு பசியை போக்குகிறோம்
கார்கிவ் நகரில் மருத்துவம் பயிலும் கர்நாடகா மாணவி அனைனா அண்ணா கூறியதாவது, "நவீன் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள பதுங்கு குழியில் இருக்கிறேன். சாக்லேட், பிஸ்கட்கள் மட்டுமே சாப்பிட்டு பசியை போக்கி வருகிறோம். சந்தையில் சரியான பொருள்கள் இல்லை. அதேபோல், எங்களிடம் பணமும் இல்லை. ஒன்று, நாங்கள் பசியால் இறக்கலாம் அல்லது ரஷ்ய துப்பாக்கிச் சூடுகளால் தாக்கப்படலாம். எனவே ரிஸ்க் எடுத்து (ஹங்கேரி எல்லைக்கு) வெளியேற முடிவு செய்துள்ளோம்.இது, சாலை வழியாக 30-40 மணிநேர பயணமாக இருக்கும். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.
மற்றொரு இந்திய மருத்துவ மாணவர், ஆர் கௌதம், ரயிலில் எல்வ் நகரை நோக்கிச் செல்கிறார். அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அனுப்பிய மெசேஜில், "தயவுசெய்து கார்கிவில் மாணவர்களைக் காப்பாற்றுங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.