கேரளாவில் ரெட் அலர்ட் : கேரளாவின் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், அங்கு ரெட் அலர்ட் கொடுத்து இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றன. மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து 3 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 196 ஆகவும், ஒட்டுமொத்தமாக 340-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 11 மாவட்டங்களில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், ''திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோடு மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் தொடர்ந்து மிகக் கனமழை நீடிக்கும். வடமேற்கு வங்கக் கடல் அருகே அடுக்க 24 மணிநேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், 11 மாவட்டங்களிலுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.