Leaders Opinion About Budget 2022 : 2022-ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 01) தொடங்கியது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் கரன்சி, வருமான வரி, இறக்குமதி வரி, மருத்துவம் கல்வி, இளைஞர்கள் பெண்கள், என பல்வேறு நலன்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் புகழ்ந்து வருகினறனர்.
அதே சமயம் எதிர்கட்சிகள் தரப்பில் பட்ஜெட்டில், அடித்தட்டு மக்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனுள்ள அம்சங்கள் எதும் இல்லை என்றும் குறைகூறி வருகின்றனர். அந்த வகையில் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துக்கள் :
பிரதமர் மோடி :
இந்த மக்கள் நல மற்றும் முற்போக்கான பட்ஜெட்டுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்துகிறேன். நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட் குறித்து விரிவாக பேசுவேன். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. இது பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கு ஒரு சிறந்த படியாகும்.
இது அதிக முதலீடு, அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலை வாய்ப்புகளைத் தூண்டுகிறது. புதிய பசுமை வேலை வாய்ப்புகளும் உள்ளது மற்றும் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி :
இந்த பட்ஜெட்டில் சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் MSME களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்
முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம்:
ஜிடிபி வளர்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை இந்தியா காட்டுகிறது. “எளிமையான மொழியில், சொல்ல வேண்டும் என்றால், 31.3.2022 அன்று GDP 31-3-2020 அன்று இருந்த அதே அளவில் இருக்கும் என்று அர்த்தம்” என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி:
சராசரி மக்களுக்கு மத்திய பட்ஜெட் ஜீரோ. வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் எவ்வித பயனும் இல்லை. பெகாசஸ் விவகாரத்தில் இருந்து திசை திருப்பும் நோக்கமாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி. சசிதரூர்
இதுவரை கவலைக்குரிய விஷயமாக இருந்த டிஜிட்டல் கரன்சியில் மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது தெளிவாக தெரிந்தாலும், இந்த பட்ஜெட்டில், சாமானிய மக்கள் குறித்து கவலைப்படாதது வேதனை தருவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
இந்த பட்ஜெட் குறிப்பாக விவசாயிகளுக்கும் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிககைகள், இளைஞர்களுக்கு 60 லட்சம் வேலைவாய்ப்புகள, மிஷன் சக்தி போன்ற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைள் போன்ற நடவடிக்கைகள் நமது பொருளாதாரத்தை உயர்த்தும் என்று கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்
மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்</strong>
மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், சிறு-குறு தொழிலுக்கு உதவி,விவசாயத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிதி உள்ளிட்டவை மகிழ்ச்சியளித்தாலும் LIC பங்கு விற்பனை, நீர்பாசனத் திட்டங்களில் தனியார்மயம், தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றமில்லாதது ஆகியவை கவலையளிக்கின்றன என கூறியுள்ளார்.
வருமான வரியில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்று விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூறியுள்ளார்.
மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஒரே நாடு ஒரே ஆவணப் பதிவு சட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
விவசாயம், தொழில் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று தாமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் நனைந்துபோன பட்டாசு போன்று உள்ளது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil