IRCTC: ரயில் எங்கே வந்துக் கொண்டிருக்கிறது என்ற லைவ் தகவல்களை பயணிகள் தெரிந்துக் கொள்ள வாட்ஸ் ஆப்புடன் சேர்ந்து இந்தியன் ரயில்வே ஒரு புது யுக்தியைக் கையாண்டிருக்கிறது.
நீங்கள் பயணிக்க இருக்கும் ரயில் குறித்த தகவல்களை பெற வாட்ஸ் அப் வசதி:
ஒவ்வொரு முறை அப்டேட் ஆகும் போதும் ஏதாவது ஒரு புது விஷயத்தை அறிமுகப் படுத்துகிறது வாட்ஸ் ஆப். அந்த வகையில் இந்த முறை ரயில் அப்டேட்டுகளை லைவாக பெறுவதற்கு வழி வகை செய்துள்ளது. பயணத்தின் போது ரயில் தாமதமாவதால் பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதை சரிசெய்து, எளிமையான முறையில் குறிப்பிட்ட ரயிலின் தகவல்களைத் தெரிந்துக் கொள்ள இந்திய ரயில்வே வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆப்ஷனைக் கொடுத்திருக்கிறது.
பயணிகள் முன்பு போல் 139-க்கு அழைக்கத் தேவையில்லை என்றும், நீங்கள் செல்லவிருக்கும் குறிப்பிட்ட ரயில் இப்போது எந்த ஸ்டேஷன் பக்கத்தில் வந்துக் கொண்டிருக்கிறது போன்ற தகவல்களை வாட்ஸ் அப்பிலேயே பெற்றிட முடியும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்த சேவையை எப்படி பெறுவது?
- 7349389104 என்ற எண்ணை உங்களது அலைபேசியில் சேமிக்கவும்
- பிறகு வாட்ஸ் அப்பை திறக்கவும்
- நீங்கள் எந்த ரயிலைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமோ, அந்த ரயிலின் எண்ணை நீங்கள் சேமித்திருக்கும் எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணவும்.
- நீங்கள் கேட்ட ரயிலின் தகவல்களை திரட்டி 10 நிமிடத்திற்குள் உங்களுக்கு பதில் வந்துவிடும்.
இந்திய ரயில்வே துறை - மேக் மை டிரிப்புடன் இணைந்து கொண்டு வந்திருக்கும் இந்த வசதி பொதுமக்களுக்கு பதற்றம் இல்லாமல் பயணிக்க உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.