By: WebDesk
April 4, 2018, 5:45:35 PM
சந்திரன்.
இந்திய ரயில்வே சார்பில் செய்யப்பட்டு வரும் ரயில்வே இருப்புப் பாதை புதுப்பிக்கும் பணியில், கடந்த நிதியாண்டில் சாதனை அளவு எட்டப்பட்டுள்ளது. ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட தகவல்படி, இது 4405 கிலோ மீட்டர் நீளம் என தெரிய வருகிறது. இதற்கு முன்பு ஓராண்டில் அதிகபட்சமாக 4175 கிலோ மீட்டர் நீளத்துக்குத்தான் பணிகள் நடந்துள்ளது. அது 2004-05ம் ஆண்டில்.
இந்தியாவில் தற்போது 1,14,907 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதை உள்ளது. அதில் சராசரியாக ஓராண்டுக்கு 4,500 கிலோ மீட்டர் நீளப்பாதையில் புதுப்பிக்கும் பணி தேவைப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த அளவு பணிகள் நடப்பதில்லை.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ரயில்வே பாதுகாப்புக்கான சிறப்பு நிதித் தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனாலும், நிதி பற்றாக்குறை என காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த மராமத்து பணிகள் குறைவாகவே நடந்து வந்தன. இதனாலேயே, ரயில் விபத்துகள் அதிக அளவில் தொடர்ந்தன. அதைக் குறைக்கும் நோக்கிலேயே புதிய பாதை அமைப்புக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 35 ஆண்டுகளில், இல்லாத அளவாக, கடந்த ஆண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை முதல்முறையாக இரண்டு இலக்கத்திலேயே… அதாவது 100 என்ற 3 இலக்கத்தை எட்டாமல் குறைக்கப்பட்டுள்ளது. 1960களின் இறுதி நாட்கள் வரை இந்தியாவில் ஓராண்டில் நடந்த ரயில்வே விபத்துகளின் எண்ணிக்கை 1000 என்ற 4 இலக்கத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது. அது மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு, தற்போது 2017-18ல் 73 ரயில் விபத்துகள் என குறைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய ரயில்வே பாதுகாப்பு நிதியம் என்ற திட்டத்தின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் – பாதுகாப்புப்பான ரயில்வே பயணத்தின் தேவைக்காக செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Indian railways carries out highest ever track renewal of 4405 km