ஆர்.சந்திரன்
தேவையைப் பொறுத்து, கட்டணத்தை உயர்த்தும் 'மாறுபடும் ரயில்வே கட்டண' திட்டத்துக்கு, மத்திய அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், பல மடங்கு அதிக கட்டணத்துடன் ஏற்கனவே இயங்கி வந்த சொகுசு ரயில்களில், போதுமான அளவு பயணிகள் இல்லை என்பதால், சாமானியர்களுக்கும் அதில் வாய்ப்பளிக்கும் விதமாக, தற்போதைய அதன் கட்டணத்தில் சலுகைகள் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பேலஸ் ஆன் வீல்ஸ், கோல்டன் சேரியட், மஹாராஜா எக்ஸ்பிரஸ் என்ற பெயர்களில் இந்திய ரயில்வே துறையின் அதிநவீன சொகுசு ரயில்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்தான் இந்த ரயில்களின் முக்கிய வாடிக்கையாளர்கள். அதனால், இதன் கட்டணமும் கூடுதலாக, அதாவது சராசரி இந்திய குடிமகனால் செலுத்த இயலாத அதிகக் கட்டணமாகவே இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக, இந்த ரயில்களில் பயணிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாகவும், அதனால், இழப்பைச் சமாளிக்கும் ஒரு யுக்தியாக, உள்ளூர் நடுத்தர வருவாய் பிரிவினரும் இந்த ரயில்களைத் தேர்வு செய்யும் விதமாக அதன் கட்டணத்தில் சில சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த சலுகையை ஐஆர்சிடிசி எனப்படும் ரயில்வே துறையின் துணை நிறுவனம், அல்லது அந்தந்த மாநிலங்களின் சுற்றுலாத்துறை ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த சலுகை திட்டத்தை வடிவமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக கடந்த 1ம் தேதி நடந்த ரயில்வே போர்டின் கூட்டத்தில் இந்த சுற்றுலா ரயில்களில் வசூலிக்கப்படும் சுற்றுலா ஏற்பாட்டுக் கட்டணத்தை 50 சதவீதம் குறைத்துப் பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டள்ளது. ஏற்கனவே, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள சுற்றுலா வாரியங்கள், இந்த சலுகைக் கட்டணத்தை சலுகை அளிக்கும் இழப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக முன் வந்துள்ள நிலையில் இந்திய ரயில்வே சார்பில் இது குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் கோடையில் நீண்ட சுற்றுலா செல்லும் யோசனையில் உள்ளவர்கள் இப்போதே அதற்கு திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.