முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் : வேறு நபருக்கு மாற்றித் தர அனுமதி

பயணக் குழுவின் தலைவர் இவ்வகையிலான கோரிக்கையை தந்து, முன்பதிவு பயண டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக் கொள்ள முடியும்.

ஆர்.சந்திரன்

இந்திய ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்த ஒரு நபர், தவிர்க்க முடியாத காரணத்தால், தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டி வந்தால், முன்பதிவு செய்த அந்த பயணக் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றித்தரும் முறையை இந்திய ரயில்வே அனுமதிக்க உள்ளது.

நாட்டின் பல துறைகளில் நடந்து வரும் பல்வேறு மாற்றங்களில் ஒன்றாக, இந்திய ரயில்வேயும் இந்த புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை சட்டப்படி குற்றமாக கருதப்பட்ட இந்த காரியம் இனி அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு மாற்றித் தரப்படும் பயண டிக்கெட்டுக்கு, அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு கண்காணிப்பாளர் ஒப்புதல் தரலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

மேற்கண்ட மாற்றம் செய்வது குறித்து கூடுதலாக சில நிபந்தனைகளும் தரப்பட்டுள்ளன. அதன்படி, அரசு ஊழியர் ஒருவர் திட்டமிட்டடி பயணிக்க முடியாமல் பயணத்தை ரத்து செய்யும் பட்சத்தில், பயண நேரத்துக்கு 24 மணி நேரம் முன்னதாக இதைத் தெரிவித்து, முன்பதிவை வேறு நபருக்கு மாற்றத் தரலாம். இதை அவரோ, அவரது அலுவலக மேலதிகாரியோ யார் வேண்டுமானாலும் ரயில்வேயிடம் முறையிட்டு மாற்றம் செய்து கொள்ள அனுமதியுண்டு.

அதேபோல, தனிப்பட்ட நபர் ஒருவருக்கு இதேபோல, பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், 24 மணி நேரம் முன்னதாக கோரிக்கை வைத்து தனது குடும்ப உறுப்பினர்களான தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவி என யாருக்கும் அந்த பயண முன்பதிவை மாற்றித்தரலாம். இதேபோல, பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், 48 மணி நேரத்துக்குமுன் தொடர்பு கொண்டு, தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித் தரலாம். இதற்கான கோரிக்கையை அந்த கல்வி நிறுவனம் சார்பில் அதன் தலைவரும் மேற்கொள்ளலாம்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு குழுவாகச் செல்ல நினைத்தவர்களில் யாரேனும் ஒரு சிலர், இதுபோல தங்களது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அந்த பயணக் குழுவின் தலைவர் இவ்வகையிலான கோரிக்கையை தந்து, முன்பதிவு பயண டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு 48 மணி நேரம் முன்னதாகக் தொடர்பு கொள்ள வேண்டும். இதே வகையில் என்சிசி இயக்கதிதில் உறுப்பினராக உள்ளவர்கள் குழுவாக பயணிக்கும்போது ஏற்படும் எதிர்பாராத ரத்துகளின்போதும், பயண டிக்கெட் பெயர் மாற்றம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இது மொத்த எண்ணிக்கையில் 10 சதவீத எண்ணிக்கை கொண்டதாக கோரிக்கை இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும். கூடுதல் எண்ணிக்கையில் இவ்வித கோரிக்கை ஏற்கப்படாது என இந்திய ரயில்வே செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian railways now lets you transfer your train ticket to someone else

Next Story
பொதுமேடையில் அத்வானியை புறக்கணித்தாரா மோடி? (வீடியோ)
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express