'விமான நிலையம்' போன்ற, ரயில்நிலையம் : தமிழகத்தில் 5 ரயில் நிலையங்கள் தேர்வு

இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து சென்னை எழும்பூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆர்.சந்திரன்

விமான நிலையங்களில் உள்ளது போல, பல நவீன வசதிகள் கொண்டதாக முக்கிய ரயில் நிலையங்களை மாற்ற இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக, 90 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் இந்த நவீனமயமாக்க முயற்சிகள் நடக்க உள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி உட்பட 5 முக்கிய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையிலேயே திதியமைச்சர் அருண்ஜெட்லி இந்த திட்டத்தை அறிவித்தார். இதன்படி, நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் என 90 முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டடுள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து சென்னை எழும்பூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நகரங்களில் சுற்றுலா மற்றும் தொழில் முக்கியத்துவம் உள்ள நகரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த ரயில் நிலையங்கள் ஒவ்வொன்றையும் எந்த நிறுவனம், அல்லது அமைப்பு மேம்படுத்தும் என்ற பெயருடன் கூடிய பட்டியலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்த மேம்பாட்டினால், இந்த ரயில் நிலையங்களில் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் வரும், அதோடு, வைஃபை வசதி, தேவையான புனர்நிர்மாணப் பணிகள்இ குடிநீர் வசதி, எல்இடி விளக்குகள், லிப்ட் வசதி, எஸ்கலேட்டர்கள், எவர்சில்வரால் ஆன அமரும் வசதி, நவீன உணவக வசதி, போதுமான காத்திருப்பு அறைகள், ஓய்வு அறைகள், கழிப்பறை போன்ற அனைத்தும் கொண்டதாக மாறும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்தகட்டமாக, மேலும் 600 முக்கிய ரயில் நிலையங்களைத் தேர்வு செய்து அதை வேறு நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்தும் திட்டமும் ரயில்வேயிடம் உள்ளது. ஸ்ரீஜென் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த திட்டத்தில் ரயில்வேயுமடன் சேர்ந்து பங்காற்ற விரும்புபவர்கள் மார்ச் 26ம் தேதிக்கு முன்னதாக, MyGov வலைதளம் மூலம் தங்களது யோசனைகளைத் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close