Indian student | Chicago | United States of America: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் மற்றொரு துயரமான சம்பவமாக இந்திய மாணவர் ஒருவர் சிகாகோவில் நேற்று கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டுள்ளார். அவர் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் தாக்கப்பட்டதாகவும், அவரைத் தாக்கி விட்டு உடமைகளை கொள்ளையடித்தாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள அவரது மனைவி, அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி மற்றும் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாகவும், அருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதி செய்துள்ளது.
இந்த கொடூரமான சம்பவத்தை விவரிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளி காட்சிகளில், இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி, தாக்கப்படுவதும், அதிக அளவில் ரத்தம் கொட்டியதையும் அதில் காண முடிந்தது. இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றொரு வீடியோ, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளாகத் தோன்றுகிறது, சிகாகோ தெருக்களில் அலி மூன்று தாக்குதல்காரர்களால் துரத்தப்படுவதைக் காட்டுகிறது.
“நான் சாப்பாட்டைச் சுமந்துகொண்டு சாலையில் நடந்து கொண்டிருந்தபோது நான்கு பேர் என்னைப் பிடித்து அடித்து உதைத்தனர். என் போனையும் யாரோ எடுத்தார்கள்,” என்று கூறிவிட்டு, “தயவுசெய்து எனக்கு உதவுங்கள் அண்ணா, தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்று இந்தியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சையத் மசாஹிர் அலி அந்த வீடியோவில் கூறுகிறார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் மற்றொரு வீடியோ கிளிப்பில், “இது என்னால் மறக்க முடியாத ஒன்று. என்னை நோக்கி துப்பாக்கியை காட்டினார். என் தலையில் இரண்டு காயங்கள் உள்ளன. எனது கால்கள், அவரது முகம், அவரது முதுகு மற்றும் விலா எலும்புகளில் அடிபட்டுள்ளது." என்கிறார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
கொள்ளை நடப்பதற்கு முன்பு அதிகாலை 1 மணியளவில் கருப்பு கலர் செடான் கார் அந்தத் பகுதியைச் சுற்றி வருவதை அவர்கள் கவனித்ததாக அவரது நண்பர் ஒருவர் கூறியுள்ளார். அண்டை வீட்டாரின் சி.சி.டி.வி-யில் இருந்த வீடியோ காட்சிகளின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் காரில் இருந்து குதித்து அவருக்காக காத்திருந்தனர் என்று போலீசாரின் அறிக்கை கூறுகிறது.
கோரிக்கை
இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி மனைவி சையதா ருகுலியா பாத்திமா ரிஸ்வி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், பிப்ரவரி 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தனது கணவரின் நண்பரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், மசாஹிர் அலி மிகவும் மோசமாக தாக்கப்பட்டதாகவும், சிகாகோவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர் தனது கணவருடன் தொடர்பு கொண்டாலும், "அவர் அதிர்ச்சியில் இருந்தார், என்னுடன் பேச முடியவில்லை, மேலும் அவரது முகம் முழுவதும் ரத்தம் வழிந்தது" என்று சையதா ருகுலியா பாத்திமா ரிஸ்வி கூறினார்.
மேலும், அவர் தனது கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறும், அமெரிக்காவில் தனது கணவருடன் சேருவதற்கு தனக்கும் அவர்களது மூன்று மைனர் குழந்தைகளுக்கும் பயண ஏற்பாடுகளை எளிதாக்க உதமாறும் சையத் மசாஹிர் அலி மனைவி வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக சிகாகோ போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.@DrSJaishankar Sir, One Syed Mazahir Ali from Hyderabad, Telangana pursuing Masters in IT from Indiana Weslay University was robbed & attacked on 4th Feb by four persons in Chicago, Since this attack Syed Mazahir Ali is under mental shock and is in need of help.Ask… pic.twitter.com/Cf2jeMAvPw
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) February 6, 2024
ஒரே மாதத்தில் 4 பேர் மரணம்
கடந்த மாதத்தில் இருந்து இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது சமீபத்திய தாக்குதலாகும். இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் அமெரிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 இந்திய மாணவர்கள் மர்மான முறையில் இறந்து கிடந்தனர்.
கடந்த வாரம் அமெரிக்காவின் சின்சினாட்டியில் உள்ள லிண்ட்னர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் படிக்கும் மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி, ஓஹியோவில் இறந்து கிடந்தார். இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
ஒரு வாரத்திற்கு முன்பு, இந்தியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் இந்திய கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் மாணவர் நீல் ஆச்சார்யா காணாமல் போனதாக அவரது தாயார் புகார் அளித்தார். அவர் வளாகத்தில் இறந்து கிடந்தார்.
ஜனவரி 16 அன்று, அமெரிக்காவில் எம்.பி.ஏ பட்டதாரியான விவேக் சைனி, ஜார்ஜியாவின் லித்தோனியாவில் உள்ள கடையில் வீடற்ற ஒருவரால் சுத்தியலால் பலமுறை அடிப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
ஜனவரி 20 ஆம் தேதி, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள கட்டிடத்தின் பின்புற தாழ்வாரத்தில் 18 வயதான இந்திய-அமெரிக்க மாணவர் அகுல் தவான் தாழ்வெப்பநிலை அறிகுறிகளுடன் இறந்து கிடந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.